ஜெயா தொ.கா வுக்குப் பணம் கொடுக்கிறார்கள், கலைஞர் தொகா விடம் பணம் கேட்கிறார்கள்– அரசு கேபிள் நிறுவன அட்டகாசம்.


ஒளிபரப்பு கட்டணத்தை உயர்த்தி தனியார் தொலைக்காட்சிகளை முடக்க நினைக்கும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி. இணைப்புகள் மூலம் சில தனியார் நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்து வந்த நிலையில், அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் கேபிள்.டி.வி. இணைப்பை சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் அரசு கேபிள் மூலம் நடத்தி; வருகிறது, இந்த நிலையில், அரசு கேபிள் மூலம் ஒளிபரப்பு செய்ய தொலைக்காட்சி நிறுவனங்கள் செலுத்த முடியாத மிகப்பெரிய தொகையை அலைவரிசை ஒதுக்க அரசு கேபிள் நிறுவனம் நிர்பந்தித்து வருகிறது. அதேபோல் அரசு கேபிள் நிறுவனம் தொலைக்காட்சிகளுக்கிடையே பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதனால் தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.
தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் சன்.டி.வி., விஜய்.டிவி., ராஜ்.டிவி., ஜெயா.டிவி., ஜெயா பிளஸ் உள்ளிட்ட சேனல்களை அரசு கேபிளில் ஒளிபரப்ப மாதம் தோறும் பல கோடி ரூபாய் வழங்கி வருகிறது. மேலும் இந்த தொலைக்காட்சிகள் துல்லியமாக தெரியும் வகையில் தரமான அலைவரிசையை இலவசமாகவும், அரசு கேபிள் நிறுவனம் ஒதுக்கியுள்ளது. ஆனால் அரசு கேபிளில் ஒளிபரப்ப எந்த கட்டணமும் பெறாமல் தங்களது டி.வி. சேனல்கள் மூலம் நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை இலவசமாக வழங்கி வரும் கலைஞர் டி.வி, புதிய தலைமுறை, புதுயுகம், தந்தி டி.வி., பாலிமர் டி.வி., பாலிமர் செய்திகள், மக்கள் டி.வி., வசந்த் டி.வி., நியூஸ் 7 சேனல் உள்ளிட்ட தொலைக்காட்சிகள் தற்போது உள்ள அலைவரிசையிலேயே ஒளிபரப்பு தொடர வேண்டுமென்றால் மாதம் ஒன்றிற்கு 43 லட்சம் முதல் 65 லட்சம் ரூபாய் வரை அரசு கேபிள் டி.வி.க்கு வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பாரபட்சத்தை எதிர்த்து தமிழ் செயற்கைக்கோள் ஒளிபரப்பு உரிமையாளர் சங்கத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இன்று இதற்கு ஆதரவளிக்கக்கோரி, தமிழ் செயற்கைக்கோள் ஒளிபரப்பு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், வின் தொலைக்காட்சி உரிமையாளருமான தேவநாதன் தலைமையில் தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம், வசந்த் தொலைக்காட்சியின் நிறுவனர் வசந்தகுமார், மூன் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சா.நவாஸ்கான், மக்கள் தொலைக்காட்சியின் முதன்மை செயல் அலுவலர் கோமல் அன்பரசன், இமயம் டி.வி. பொது மேலாளர் ஆனந்த், சத்யம் டி.வி. பொதுமேலாளர் சுவாமிநாதன், பிளாஷ் டி.வி உரிமையாளர் நீலகண்டன் உள்ளிட்டோர்; பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாஸை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஏ.கே.மூர்த்தி அலுவலகத்தில் சந்தித்தனர். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் ராமதாஸ், தனியார் தொலைக்காட்சி உரிமையாளர்கள் ஒற்றுமையாக அரசு கேபிள் நிறுவனத்திற்கு எதிராக குரல் கொடுப்பதை பாராட்டுகிறேன் என்றும், அரசு கேபிள் நிறுவனத்தின் இந்த புதிய திட்டத்தால், தொலைக்காட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நடுத்தெருவுக்கு வரும் சூழ்நிலை ஏற்படும். எனவே அரசு கேபிள் நிறுவனம் தனது முடிவை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் செயற்கைக்கோள் ஒளிபரப்பு உரிமையாளர்கள் சங்கத்தினருக்கு ஆதரவாக தானும் போராட தயார் என்று மருத்துவர் ராமதாஸ் உறுதியளித்தார்.
அதனைத்தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவை சந்தித்தனர்.
இதன்பின் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமியை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
இதேபோல், சென்னை சேப்பாகத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் தா.வெள்ளையன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரை தமிழ் செயற்கைக்கோள் ஒளிபரப்பு உரிமையாளர்கள் சங்கத்தினர் சந்தித்து ஆதரவு திரட்டினர்.
அப்போது, கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தமிழக அரசு கேபிள் நிறுவனத்தின் இந்த அடக்குமுறையை வன்மையாக கண்டிப்பதாகவும், தமிழ் செயற்கைக்கோள் ஒளிபரப்பு உரிமையாளர்கள் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு எதிராக எத்தகைய போராட்டங்கள் நடத்தினாலும் அதற்கு ஆதரவளிப்போம் என்று தெரிவித்தனர்

Leave a Response