
தமிழக கூலித் தொழிலாளர்களை சுட்டுப் படுகொலை செய்த ஆந்திர அரசையும் காவல்துறையையும் கண்டித்து போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்லுதல் தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றஅரங்கில் ஏப்ரல்11 அன்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்…
– தமிழகத்தில் இருந்து கூலித் தொழிலாளர்களாக ஆந்திரா சென்ற 20 தமிழர்களை ஆந்திரா காவல்துறையினரும் வனத்துறையினரும் கைது செய்து சித்ரவதைக்குள்ளாக்கி சுட்டுப் படுகொலை செய்து வனப்பகுதி ஒன்றில் போட்டுவிட்டு செம்மரம் கடத்தியதால் சுட்டோம் என்று அப்பட்டமான பொய்யை கூறி வருகிறது. ஆந்திரா காவல்துறை மற்றும் வனத்துறையினரின் இந்த கொலைபாதக செயலை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த காட்டுமிராண்டித்தனமான படுகொலையை நிகழ்த்திய ஆந்திரா செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவர் டி.ஐ.ஜி. காந்தாராவ் உட்பட அனைத்து காவல்துறை, வனத்துறையினரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும். இந்த படுகொலையை அரங்கேற்ற தூண்டிய கொடியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
– 20 தமிழர்களைப் படுகொலை செய்த ஆந்திரா காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வரவேற்கிறது. அதே நேரத்தில் இந்த படுகொலை குறித்து முழுமையான உண்மைகள் வெளிவர மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் வரும் ஏப்ரல் 28-ந் தேதியன்று ‘தமிழர் நீதி பேரணி’ நடத்திட தீர்மானிக்கப்படுகிறது. சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் தொடங்கும் இந்த பேரணி கிண்டி ஆளுநர் மாளிகையில் முடிவடையும். பேரணியின் முடிவில் மேதகு ஆளுநர் அவர்களை சந்தித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் கோரிக்கை மனு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
– ஆந்திராவில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தி வெளியானது முதல் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், திராவிடர் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய சங்கங்கள், வழக்கறிஞர்கள், படைப்பாளிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. அத்துடன் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே அணியாக தமிழர் என்ற ஒற்றைக் குடையின் கீழ் ஏப்ரல் 28-ந் தேதியன்று சென்னையில் நடைபெறும் பேரணியில் பங்கேற்று நீதிகோரும் நமது குரலை மத்திய அரசுக்கும் ஆந்திரா அரசுக்கும் தமிழக அரசுக்கும் உரத்துச் சொல்லுவோம்! ஜாதி, மத, கட்சி எல்லைகளைக் கடந்து தமிழராய் ஓரணியில் ஏப்ரல் 28-ந் தேதியன்று திரள்வோம்! எனவும் இக்கூட்டம் அன்புடன் அழைக்கிறது.
என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில். வைகோ, திருமாவளவன், வேல்முருகன், மணியரசன், தியாகு,பொழிலன், வெள்ளையன், சுப.உதயகுமாரன் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.


