தீரன் அதிகாரம் ஒன்று படம் பேசும் அரசியல் ஆபத்தானதா? – ஓர் அலசல்

தீரன் அதிகாரம் ஒன்று – கருத்தியல் குழப்பங்களும் ஆபத்தும்

ஒரு தொழில்நுட்பம் சார்ந்த கலைப்படைப்பு என்கிற வகையில் ‘தீரன்’, இரண்டரை மணிநேர நல்ல பொழுதுபோக்கு சினிமாதான். அதில் சந்தேகமில்லை. ஆனால், அது உருவாக்குகிற உளவியல், அது சார்ந்துநின்று பேசும் கருத்தியல் மிகவும் ஆபத்தானது.

போலீஸ் தரப்பை, அதன் கள யதார்த்த கஷ்டங்களை, பிரச்னைகளை, அவர்களது பாதுகாப்பற்ற வாழ்க்கையை மிகுந்த கரிசனத்தோடு பேசியிருக்கிறார் இயக்குநர் வினோத். அதேசமயம் பழங்குடிகளை மிக ஆபத்தான முறையில் சித்திரித்திருக்கிறார். அவர்களது வரலாற்றின் வாழ்வின் ‘ஒரு பக்க’ உண்மையை மட்டும் எடுத்துக்கொண்டு தவறான முறையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

உண்மை வரலாற்றுக்கு, சம்பவத்துக்கு மிக நெருக்கமான முறையில் எடுக்கப்பட்ட யதார்த்தவகை சினிமாவா? அல்லது வழக்கமான போலிஸ் – திருடன் வகை கமர்ஷியல் ஃபேண்டஸி சினிமாவா? என்பதில் தெளிவில்லை. இரண்டு வகையான தன்மையிலும் திரைமொழி உள்ளது.

ஒருவேளை இதுதான் இப்படத்தின் சிறப்பு என யாராவது சொல்லக்கூடும் எனில், அதைவிட அபத்தம் எதுவுமில்லை. ஏனென்றால் ஒப்பீட்டளவில் ‘சிவகாசி’ போன்ற கமர்சியல் படங்கள் உண்மை தழுவிய யதார்த்த படங்களைக் காட்டிலும் ஆபத்து குறைவானவை. சீரியஸ் முகம் – கமர்ஷியல் உடல் என்பது ஒருவித விற்பனைத் தந்திரம் அல்லாது வேறில்லை.

இயற்கை வளங்களை, கனிமங்களைச் சுரண்டுவதற்கு தடையாக இருக்கும் பழங்குடிகளை மலைகளிலிருந்தும் காடுகளிலிருந்தும் துரத்தியடிக்க கார்ப்பரேட்டுகள் ‘போராடி’க்கொண்டிருக்கிற காலத்தில், பழங்குடிகளுக்கு எதிரான ஓர் அழுத்தமான மனநிலையை பார்வையாளர்கள் மனதில் விதைக்கிறது ‘தீரன்’. வடநாட்டு தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள், அலைகுடிகள், பழங்குடிகள் மீது ஒருவித அச்சத்தை உருவாக்குகிறது படத்தின் திரைக்கதை.

வேட்டைச் சமூகத்தினர் கொடூரமானவர்கள், ஈவுஇரக்கம் அற்றவர்கள் என்பதாக படத்தில் பல இடங்களில் வசனங்கள் இடம்பெறுகின்றன. மிகச் சிலர் செய்கிற தவறுகளுக்காக ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தையே குற்றவாளிகளாகச் சித்திரிப்பது மிகத் தவறு.

ஓரெழுத்தை மட்டும் மாற்றி படத்தில் குறிப்பிடப்படும் ‘பவாரியா’ மக்கள் இன்றைக்கும்கூட தங்களது அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த சினிமாவின் கதாபாத்திர வார்ப்புகள் மற்றும் அதன் கருத்தியல் சார்ந்து சிறு புத்தகமே எழுதுகிற அளவிற்கு பிரச்னைகள் இருக்கின்றன. (கைவசம் அவ்வளவு நேரம் இல்லை)

ரிலையன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தின் விநியோக வியாபாரத்தில் பார்ட்னராக இருப்பதைச் சந்தேகப்படத்தான் வேண்டியிருக்கிறது.

படத்தில் சில நொடிக் காட்சி ஒன்றில் பண்பாட்டியல் ஆய்வாளர் ரெங்கையா முருகன் வந்துபோகிறார். என்ன பேசுகிறார் என்று கேட்பதற்குள் மறைந்துவிடும் அளவிளான காட்சி அது. படத்தின் உண்மைத்தன்மைக்கு, அதன் மதிப்பை ஏற்றிக்கொள்வதற்கு ஒரு பண்பாட்டு ஆய்வாளர் பலியாக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. அவர் இந்தியா முழுக்க பழங்குடிகளைத் தேடி அலைந்து அவர்களின் வாழ்வியல் நியாங்களையும் பிரச்னைகளையும் மேன்மையையும் எழுதியும் பேசியும் வருபவர்.

‘சதுரங்க வேட்டை’ படத்தின் வாயிலாக உருவான நம்பிக்கையில், ஒரு நியாயமான அரசியல் பேசியிருப்பார் என்று நம்பிச் சென்றேன். ஆனால், அவர் ஜி.நாகராஜனின் வசனத்தை படத்தின் தொடக்கத்தில் குறிப்பிட்டு நமக்கு பயாஸ்கோப் காட்டுகிறார். (ஒருவேளை பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ… இயக்குநர் கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம்?!)

‘தீரன்’ என்கிற படத்தின் பெயரில் எந்த அரசியலும் இல்லை என்று நீங்கள் நம்புகிறீர்களா?
‘தீரன்’ கவனமாக – ரசிக்கவும் மதிப்பிடவும் விமர்சிக்கப்படவும் வேண்டிய சினிமா

– வெயில்முத்துபெருமாள்

Leave a Response