கௌரிலங்கேஷ் படுகொலை- கர்நாடக தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்


கண்டனம்! கடும் கண்டனம்!!
கர்நாடகாஇந் தியாவின் தலைச்சிறந்த இதழியலாளரும், வியக்கவைக்கும் சிந்தனையாளரும், அரும்பெரும் சமூகப்பற்றாளரும், ஆகச்சிறந்த பகுத்தறிவாதியுமான கௌரிலங்கேஷ், பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் அடிப்படைவாதிகளால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு உலக சிந்தனையாளர்கள், ஊடகவியலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.  மனிதநேயமற்ற, மக்களாட்சிக்கு எதிரான இந்த படுகொலையை கர்நாடகத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. 
நமது நாட்டின் மிக‌ச்சிறந்த பகுத்தறிவாதிகளான எம்.எம்.கலபுர்கி, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோரை தொடர்ந்து அடிப்படைவாதிகளால் குறிவைக்கப்பட்டு கௌரிலங்கேஷ் படுகொலைசெய்யப்பட்டுள்ளதை தாங்கமுடியாமல் துடிக்கிறோம். சமூகத்தின் அடித்தட்டு மக்களின் குரலாக ஓங்கி ஒலித்த மகத்தான இதழியலாளரை இழந்துள்ளோம் என்பதை இன்னும் நம்பமுடியவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்காக அல்லும் பகலும் சிந்தித்து, உரக்க ஒலித்தவர் கௌரிலங்கேஷ். கர்நாடகத்தில் செயல்பட்ட அதிதீவிரமான முற்போக்கு இதழியலாளரான கௌரிலங்கேஷின் படுகொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தகுந்த சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி, தண்டிக்க வேண்டுமென்பதே மனச்சாட்சியுள்ள உலக மக்க‌ளின் வேண்டுகோளாகும். 
கௌரிலங்கேஷுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக உலக இதழியலாளர்கள் அனைவரும் கிளர்ந்தெழுந்து, சகிப்பின்மைக்கு எதிரான சிந்தனைகளை எதிர்த்து வீறுகொண்டு போராட வேண்டிய தருணம் வந்துவிட்டதாக கருதுகிறோம். ஊடகவியலாளர்களை மௌனிக்கவைக்க அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற கீழ்த்தரமான, மனிதநேயத்திற்கு மாறான‌ முயற்சிகளை ஊடகவியலாளர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டியது அவசியமாகும்.
இந்தியாவில் ஊடகவியலுக்கு எதிரான போக்கு அண்மைகாலமாக அதிகரித்துவருவது அதிர்ச்சி அளிக்கிறது. மக்களாட்சியின் மனச்சாட்சியாக உள்ள ஊடகங்கள் இல்லாவிட்டால், இந்தியாவில் நடந்தேறும் அநீதிகள், அடக்குமுறைகள், அடாவடித்தனங்க‌ளை தட்டிக்கேட்க ஆளில்லை என்ற நிலை உருவாகிவிடும் ஆபத்துள்ளது என்று எச்சரிக்கிறோம். அண்மைகாலமாக அரும்பி வரும் சகிப்பின்மைக்கு மடைபோட வேண்டிய கடமையை ஊடகவியலாளர்கள் மறக்காமல் செய்ய துண்டிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, விடுதலை உணர்வின் சின்னமாக விளங்கிய, அடித்தட்டு மக்களின் படிக்கட்டாக திகழ்ந்த‌ கௌரிலங்கேஷுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்- ந.முத்துமணி-தலைவர், ஆ.வி.மதியழகன்-செயலாளர், கர்நாடகத்தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கம், பெங்களூரு.

Leave a Response