
காயத்ரி பேசிக் கொண்டிருந்த போது ,இவ யாரு எனக்கு சொல்றது.. என் பிரச்னையைப் பார்த்துக்க எனக்குத் தெரியாதா, சிநேகன் கிட்ட போய் எப்பவாவது பிரச்னைன்னு நான் நின்னிருக்கேனோ.. அவராதான் தானா முன்வந்து உதவி செஞ்சிருக்கார் இது என் சுயமரியாதை சம்பந்தப்பட்ட விஷயம்’ என்று பொங்கினார்.
‘சிநேகன் தாமாக முன் வந்து உதவியது நல்ல விஷயம்தானே?’ என்று சக்தி நியாயமான விஷயத்தை முன்வைத்தாலும் அகங்காரமும் தன்முனைப்பும் நிரம்பி வழிகிற காயத்ரியால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ’34 வருஷமா என் தனிப்பட்ட பிரச்னைகளைக் கூட நானேதான் பார்த்திட்டு இருக்கேன். என் ஃபேமிலி கூட எனக்கு ஹெல்ப் பண்ணதில்ல’ என்றெல்லாம் பெரிய குண்டுகளாக அவர் வீசிக் கொண்டிருந்தார்.
பிறந்த கணத்தில் இருந்தே தன் பிரச்னைகளை தானே தீர்த்துக் கொண்ட காயத்ரி காப்பாற்றப்பட்டது குறித்து பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு நிறைய எரிச்சலும் கோபமும் இருக்கலாம். தங்களின் வாக்குகள் வீணாகி விட்டதே என்கிற நியாயமான கவலையும் தோன்றலாம்.
ஆனால் ,ஓவியா, ஜூலி போன்ற முக்கியமான போட்டியாளர்கள் வெளியேறி விட்ட நிலையில், பிந்து மாதவி வீட்டிற்கு வெளியே இன்னமும் ‘விருந்தினராக’ நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் காயத்ரியின் வெளியேற்றமும் நிகழ்ந்தால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்காது. காயத்ரி இருந்தால்தான் கலகம் பிறக்கும். கலகம் பிறந்தால்தான் சண்டை நடக்கும். சண்டையை வேடிக்கை பார்ப்பதுதான் நமது நோக்கம் என்கிற முக்கியமான அடிப்படையை மறந்து விடக்கூடாது. சமூகவலைத்தளங்கள் போலவே அதுவொரு ரத்தபூமியாக நீடிக்கும் வரைதான் அதன் மதிப்பு இருக்கிறது.


