
பிக்பாஸ் பற்றி.
ஜூலி எலிமினேட் ஆனார். மக்கள் வாக்களித்தார்கள் எலிமினேட் ஆனார். அதோடு முடிந்தது விவகாரம். ஆனால் தொடர்ந்து அவர் வாழ்க்கை குறித்த அச்சத்தை அவருக்குள் உருவாக்கும் சொற்களில் மக்களுக்குக் கமலஹாசன் விடுத்த வேண்டுகோள் மிகவும் வருந்தச் செய்தது. இதுவரை எலிமினேட் ஆன எந்த பிரபலத்திடமும் இப்படியாகக்கேட்கப்படவில்லை. அவர்கள் அவர்களாகவே வெளியேற அனுமதிக்கப்பட்டார்கள்.
ஆனால் ஜூலி குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டார்.
காரணம் ஜூலி ஒரு சாதாரண பெண். அவளுக்கு இன்னும் நட்சத்திர அந்தஸ்து இல்லை. உண்மையில் அவள் சாதாரணமான பெண் தான். காயத்ரி, சக்தி, சிநேகன் போன்றவர்கள் எதிர்காலத்தில் தன் கனவுத்துறையான திரைத்துறையிலோ சின்னத்திரையிலோ கால் பதிக்க உதவலாம் என்று எண்ணியிருக்கிறாள். அதனால்தான், நாமினேட் ஆகி நிச்சயம் நாம் தான் வெளியேறுவோம் என்று தெரிந்தபிறகும் அவர் காயத்ரி காலையே சுற்றி சுற்றி வந்தார். பிழைப்புக்காக இப்படிச் செய்யாதவர்கள் யார்.
அடிமைப்படுத்தியவர்களை விட்டுவிட்டு அடிமையானவளை நியாயம் தீர்க்க எல்லோரும் கிளம்பினால் என்னாவது. ஒரு டாக்ஸி டிரைவர் ஜூலியை அவமானப் படுத்தினாராம். இனி மாலில், தெருக்களில், ஆலயங்களில் அவரவர்கள் அவரவர் பங்குக்குக் கல் எறிய ஆரம்பித்தால் என்ன ஆவது.
கடைசியில் அந்த உண்மை வெளிப்பட்டது. ‘ இப்போது புரிந்ததா, போராட்டத்தில் கூடக் கண்ணியம் வேண்டும்’ என்று கமலஹாசன் சொன்னபோது,
ஏன் ஜூலி இவ்வளவு அவமானப் படுத்தப்பட்டார் என்று எங்களுக்குப் புரிந்தது.
உண்மையில் அவர் மக்களுக்குச் சொல்லவேண்டியதெல்லாம், இது ஒரு கேம் ஷோ, விளையாட்டு அவ்வளவுதான். இதில் வெல்வதும் வெளியேறுவதும் விளையாட்டின் நியதிப்படியே. இந்த வீட்டின் எல்லைகளைக் கடந்து இதற்குப் பெரிய அர்த்தம் ஏதும் இல்லை என்பதைத்தான். ஆனால் அதைச் சொல்லமாட்டார்கள்.
-சைலபதி லட்சுமி


