
தமிழ்நாட்டில், தற்போது அனைவராலும் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விருப்பத்தோடு பார்த்துவருகிறார்கள். ஒருபுறம் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காகப் பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகின்றன. மறுபுறம், பிக் பாஸில் அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலோடு காத்துக்கிடக்கிறார்கள் ரசிகர்கள்.
இது பற்றி தூத்துக்குடி செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி.தி.வேல்முருகனிடம் கேட்டபோது “விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ‘பிக் பாஸ்’ என்ற நிகழ்ச்சி, கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கிறது. கலாசார பண்பாட்டு விழுமியங்களில் கை வைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை தமிழக அரசு உடனடியாகத் தடைசெய்ய வேண்டும். தமிழக அரசு, தடைசெய்யத் தவறும்பட்சத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்ச் சமூகத்தின் பெண்களைக்கொண்டு விஜய் தொலைக்காட்சிக்கு எதிராகவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகவும் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம்” என்று தெரிவித்தார்.


