நாகர்கோவில்,செப்.17 (டி.என்.எஸ்) சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது.

நாகர்கோவிலில் முன்னாள் அமைச்சர் பச்சைமால் பெயரில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதில், தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றி அவதூறாக கூறியிருப்பதாக தி.மு.க.வினர் புகார் கூறினர்.
இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பச்சைமால் மீது தி.மு.க. நகர செயலாளர் வழக்கறிஞர் மகேஷ் கோட்டார் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றி அவதூறாக கூறியிருந்தனர். இந்த போஸ்டர்கள் ஒட்டியவர்களை தடுத்த போது தன்னை 2 பேர் கத்தியால் குத்த முயற்சித்தனர். எனவே முன்னாள் அமைச்சர் பச்சைமால் மற்றும் கண்டால் தெரியும் 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வழக்கறிஞர் மகேஷ் நாகர்கோவில் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, முன்னாள் அமைச்சர் பச்சைமால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு கோட்டார் போலீசுக்கு உத்தரவிட்டார். அதன்படி கோட்டார் போலீசார் முன்னாள் அமைச்சர் பச்சைமால் மற்றும் கண்டால் தெரியும் 2 பேர் மீது 294பி (ஆபாசமாக பேசுதல்), 506(2) மிரட்டுதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


