போய் வா அப்பா!-எஸ்.பொ வைக் கண்ணீருடன் வழியனுப்பும் இதழாளர்

     

எஸ்.பொ என்று அனைவராலும் அறியப்பட்ட ச.பொன்னுதுரை.  1932 சூன் 4 ஆம் தேதி பிறந்தவர். யாழ் பரமேஸ்வராக் கல்லூரியிலும் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். இலங்கைப் பாட விதான சபை, திரைப்படக் கூட்டுத் தாபனம் ஆகியவற்றிலும் சில காலம் பணியாற்றினார். பின்னர் இலங்கையில் ஆசிரியராகவும் நைஜீரியாவில் ஆசிரியப் பயிற்சி கலாசாலையில் ஆங்கில இலக்கிய வரலாற்றுத்துறை விரிவுரையாளராகவும் வரலாற்றுத்துறைத் தலைவராகவும் பணிபுரிந்தார். சென்னையில் ‘மித்ர’ பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டு வந்தார். அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவந்த ‘அக்கினிக்குஞ்சு’ என்ற சர்வதேச இதழின் கௌரவ ஆசிரியராகவும் விளங்கினார்.தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனைக்கான ‘இயல் விருது’ 2010ஆம் ஆண்டு எஸ்.பொ.வுக்கு வழங்கப்பட்டது

1990 முதல் அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்று அங்கேயும் இந்தியாவிலுமாக மாறிமாறி வாழ்ந்து வந்த எஸ்.பொ. ஆஸ்திரேலிய சிட்னி நகரில் 26-11-14 அன்று காலமானார்.

தமிழ் இந்து நாளேட்டில் பணியாற்றி வருகிற ஆர்.சி. ஜெயந்தன் அவர் பற்றி எழுதியுள்ள வழியனுப்புக் குறிப்பு….

ஈழ இலக்கியத்தின் மையங்களில் ஒருவராக இயங்கி, படைப்பூக்கம் மிகுந்த பல கலகப் புனைவுகளைத் தந்து, நவீனத் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய ‘அப்பா எஸ்பொ’ என்று எங்களால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட எஸ்.பொன்னுதுரை நேற்று ஆஸ்த்ரேலியாவில் மறைந்தார் என்ற செய்தி என்னை இடியாகத் தாக்கியது. இன்னும் லட்சக்கணக்கான அவர் பெறாத என்னைப்போன்ற தமிழ்ப் பிள்ளைகளை அவரது மறைவுச் செய்தி கலங்க வைக்கும்.

அது 2003 -ம் ஆண்டு. கல்கியில் செய்தியாளராகப் பணி. தம்பி யுகபாரதியிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு. “ அண்ணா இன்னும் கொஞ்ச நேரத்தில் எஸ்பொ என்றொருவர் பேசுவார். கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் அவரை அழைத்திருக்கிறார்கள். அவரது ஆஸ்த்ரேலிய கடவுச் சீட்டு ஓவர் ஸ்டே ஆகிவிட்டது. கொஞ்சம் உதவமுடியுமா?” என்றார். எனக்கோ சிரிப்புதான் வந்தது. நான் செல்வாக்குடன் திகழ பொலிட்டிகல் பீட் செய்தியாளன் கிடையாது. என்றாலும் எனக்கு கல்கியில் வேலை வாங்கிக் கொடுத்த யுகபாரதியின் பேச்சை எப்படித் தட்டுவது? “ சரி ” என்று சொல்லிவிட்டு “ யார் இந்த எஸ்பொ?” என்று கேட்டுவிட்டேன். “ நல்ல வேளை இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டீர்கள். தாத்தாவிடம் கேட்டுவிடாதீர்கள். அவரது மித்ர பதிப்பகத்துக்கு அழைத்துப்போகிறேன். அப்போது உங்களுக்கே விளங்கும்” என்றார்.

கொஞ்ச நேரத்தில் “ ஜெயந்தன் இருக்காரா? நான் எஸ்பொ கதைக்கிறேன்” என்று ஈழத்தமிழில் பேசிய குரல் கரகரப்பாக பிசிறு தட்டினாலும் கம்பீரமாக இருந்தது. அந்தக்குரலில் என் அப்பாவின் சாயலும் கலந்திருந்தது. “ எனக்காக எனது பதிப்பகத்துக்கு வரமுடியுமா?” என்றார். கோடம்பாக்கம் மேம்பாலத்தின் கீழ் இருக்கும் மசூதிக்குச் சொந்தமான வணிக வளாகத்தில்தான் எஸ்பொவின் ‘ மித்ர பதிப்பகத்தின் அலுவலகம் இயங்கி வந்தது.

அங்கே சென்றதும் மிக எளிமையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் பேசியது எதுவுமே என் காதில் விழவில்லை. காரணம் அவர் பார்ப்பதற்கு என் அப்பாவைப் போலவே இருந்தார். ஓவர் ஸ்டே பிரச்சினையைச் சொன்னார். மென்மை மனமும் சொல்வன்மையும் மிக்க ரவி.ஆறுமுகம் ஐபிஎஸ் என் நினைவுக்கு வர அவருக்கு போன் செய்து விவரத்தைச் சொன்னேன். அவ்வளவுதான். “ என்ன எஸ்போ சென்னையில்தான் வசிக்கிறாரா?! அவருக்கு என் விசாரிப்புகளைச் சொல்லுங்கள். நான் மதிக்கும் மிக உயர்ந்த முற்போக்கு எழுத்தாளர். உடனே நீங்கள் கமிஷனர் அலுவலகம் சென்று கூடுதல் கமிஷனர் பாலச்சந்திரனைப் பாருங்கள். நான் அவருக்கு இப்போதே போன் செய்து சொல்கிறேன்” என்றவர் எஸ்போவுடன் சிலவார்த்தைகள் பேசமுடியுமா என்று கேட்டு, அரைமணிநேரம் அவரோடு பேசிக்கொண்டிருந்தார். அவர்களது உரையாடலில் வந்து விழுந்தது ‘ தீ’ என்ற சொல்.

பிறகு கட்டாயப்படுத்தி என்னை அவருடன் மதிய உணவு உண்ண வைத்த எஸ்போ “ எனது எழுத்துக்களில் எதையும் படித்திருக்கிறீர்களா செயந்தன்?” என்றார். நான் ஒருதுண்டு இஞ்சியை விழுங்கியவனைப் போல விழித்தேன். “இயக்கியம் வாசிப்பீர்கள்தானே?” என்றபடி உள்ளே எழுந்து சென்றவர். தீ, சடங்கு ஆகிய நாவல்களை என்னிடம் கொண்டு வந்து தந்தார். இரண்டுமே பழைய பதிப்புகள்.

பிறகு அங்கிருந்து காரில் கமிஷனர் அலுவலகம் சென்று பாலச்சந்திரனைச் சந்தித்து கூடுதல் அவகாசம் கிடைக்க கோரிக்கை வைத்தோம். அவர் அங்கிருந்து கோடம்பாக்கம் காவல் நிலையத்துக்கு கூப்பிட்டுச் சொல்ல, நாங்கள் காவல் நிலையும் சென்று பிரச்சினை இல்லாமல் திரும்பினோம். ஒரு எழுத்தாளனாகவும் கல்வியாளனாகவும் இருந்ததால் அவருக்கு நீட்டிப்புக் கிடைத்தது.

அன்று மாலை வீடு திரும்பியதும் இரவு தீ நாவலைப் புரட்ட ஆரம்பித்தேன். காய்ந்த புற்களை மேய்வதைப்போல் புகைந்துகொண்டிருந்த எனது நவீன வாசிப்புக்கு உண்மையாகவே தீ மூட்டியது எஸ்போவின் தீ. சடங்கு, தீ போன்ற படைப்புகளின் ஊடாக, பாலியலைப் பேசக் கூடாத ஒன்றாக கருதும் மனப்பாங்கை உடைத்து நிரவியிருந்தார் எஸ்பொ.

அதன்பிறகு அவரை நான் அப்பா என்றே அழைக்க ஆரம்பித்தேன். அவரது புலம்பெயர் சோகத்தின் பின்னணியில் இருந்த ஈடுசெய்ய முடியாத இழப்புகளைத் தெரிந்து கொண்டேன். அவரது ஆஸ்த்ரேலிய, நைஜீரிய பேராசியப்பணி அனுபவங்களை தெரிந்து கொண்டேன். அவர் வழியாக ஈழ இனவிடுதலைப்போரின் அரசியலை புரிந்திருக்கிறேன். அவர் திரும்பவும் ஆஸ்த்ரேலியா திரும்பவும்வரை அவரது கொச்சையான வசவுகளையும், இலக்கியப் பகிர்தலையும் கலவையாய் ரசித்திருக்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, எஸ்போ எனும் தனி மனிதனின் பாசத்தை நுகர்ந்திருக்கிறேன்.

ஆஸ்த்ரேலியாவில் எழுதத் தொடங்கிய தனது 1500 பக்க சுயசரிதையான ‘ வரலாற்றில் வாழ்தல்’ நூலை அவர் சென்னையில்தான் நிறைவு செய்து அச்சிட்டார். அது எஸ்போவின் வாழ்க்கை வழியே ஈழத்தின் அரசியல் வரலாற்ரையும் ஈழ இலக்கியப் போக்குகளையும் பதிவு செய்திருக்கும் மாபெரும் ஆவணம். அவரது சுயசரிதையை முன்வைத்து கல்கிக்காக அவரை நேர் கண்டு எழுதியதையும் மறக்கமுடியாது.

அப்பா எஸ்போ .. நிம்மதியாய்ப் போய்வா… உன் கலகத் தடங்களில் எங்கள் எழுத்துக்கள் தொடரும்… இந்த பூமியெங்கும் அவை பற்றிப் படரும்..

Leave a Response