
இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் அகதிகளாக உள்ள ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வலியுறுத்தி உள்ளமைக்கு அம்மாவுக்கு ஈழத் தமிழர்களின் மனமார்ந்த நன்றி.
அதே போல் ஈழத்தில் அப்பாவி ஈழத் தமிழர்களை படுகொலை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டமைக்கும் நன்றி.
சந்தித்தீர்கள் மோடியை. கோரிக்கைகளை வலியுறுத்தினீர்கள். அதற்கு மேல்?? வழமை போல் எதுவும் நடக்காது என்பது எமக்கு நன்கு தெரியும். உங்களுக்கும் தெரியும் என நம்புகின்றேன். ஆனாலும் வலிக்கின்ற ஈழத் தமிழர் இதயங்களுக்கு இந்த செய்திகள் பால் வார்க்கும் சில கணமேனும்.
அம்மா உங்களிடம் சில கேள்விகள்:
ஈழத்தமிழரை படுகொலை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோடியிடம் கேட்கின்றீர்களே? முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாளிகளில் இந்தியாவுக்கும் முதன்மை பங்கு உண்டு என தெரியுமா? குற்றவாளிகளிடம் எப்படி நீதி கேட்க முடியும்?
சரி காங்கிரஸ் அரசு என்பதால் மோடியிடம் பேசலாம் என வைத்துக் கொள்வோம். முள்ளிவைக்காலின் பின் மோடி இனப்படுகொலையாளிகளுடன் நல்லிணக்கம் கொண்டு ஆயுத உதவி, படை பயிற்சி உதவி என சிங்கள பேரினவாத அரசுக்கு உதவிக் கொண்டு தானே இருக்கின்றார்? இன்று வரை கண்டிக்காதவரா இனி ஈழத்தமிழர் படுகொலைகள் பற்றி அக்கறை எடுக்கப் போகின்றார்?
சரி மோடி நீதி நாடி தருவார் என்ற பொய்மை கதையை விடுவோம். நீங்கள் எழுவர் விடுதலையை யார் தடுத்தாலும் செய்தே தீருவீர்கள் என்ற வாக்குறுதியை அற்புதம்மாளுக்கும் மக்களுக்கும் கொடுத்தீர்களே? செய்தீர்களா?
கருணாநிதி தனது சுயநலத்திற்காக 1990 களில் அமைத்த ஈழத்தமிழர்களை கொடூரமாக வதைப்பதற்காகவே உருவாக்கப்பட்ட கொடிய வதை முகாம்களான சிறப்பு முகாம்களை மூடி ஈழத்தமிழர்களுக்கு நன்மை செய்ய ஏன் உங்களுக்கு இன்னமும் இரக்கம் பிறக்கவில்லை?
சொந்த மண்ணில் வாழ முடியாத ஈழ தமிழினம் உலகெங்கும் புலம் பெயர்ந்து பல நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்து வாழ்கின்றது. எந்த நாட்டிலும் இல்லாத கொடுமை அன்னை தமிழகத்தில் ஈழ தமிழ் அகதிகளுக்கு நடக்கிறது. இதை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து இதர நாடுகளில் வாழும் அகதியாக சென்று உரிமையோடு வாழும் தமிழ் மக்கள் போல் வாழ விட கருணை காட்ட மாட்டீர்களா?
கருணை இல்லாத கருணாநிதிக்கு தான் ஈழத் தமிழரை வதைத்துப் பார்க்கும் குரூரம் இருந்தது. நீங்களேனும் சிறப்பு முகாமை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து ஈழத்தமிழர் மேல் உண்மையில் அக்கறை இருப்பதை நிரூபித்துக் காட்டலாமே?
மோடிக்கு சொல்ல டில்லிக்கு சென்றீர்கள்? நீங்கள் முதலில் ஈழத் தமிழர் மீதான அக்கறையை எழுவர் விடுதலையிலும் சிறப்பு முகாம் மூடுவதிலும் செய்து காட்டலாமே?
சொற்கள் பெரிதல்ல! செயல்களே உயர்ந்தவை! சொல்வீர்கள். செய்வீர்களா? – செந்தமிழினி பிரபாகரன்


