
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைக்குளம் அருகே ஈத்தங்காடு நாராயணன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சசிதரன். அவரது மகன் சபரிவர்மன் (34).மாற்றுத்திறனாளி.இவர் ஈத்தங்காட்டில் மளிகைகடை நடத்தி வந்தார்.கடையில் குட்கா புகையிலை விற்றதாக தென்தாமரைகுளம் காவல்துறையினர் சபரிவர்மனை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.அங்கு அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் பரபரப்பு அடங்குமுன்பே சென்னையில் இன்னொரு மரணம் நடந்துள்ளது.
சென்னை புழல் விசாரணை சிறையில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.இதில் சேலையூர் ஜானகிராமன் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி (44) என்பவரை,கஞ்சா வழக்கில் சேலையூர் காவல்துறையினர் கைது செய்து,கடந்த 12 ஆம் தேதி புழல் சிறையில் அடைத்தனர்.
சர்க்கரை நோய் மற்றும் போதைக்கு அடிமையான பாலாஜி,பல்வேறு நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.இதனால்,பாலாஜியை சிறையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து,சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
அங்கிருந்து, நேற்று காலை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு,அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,வரும் வழியிலே பாலாஜி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் புழல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கூறுகையில்….
பாலாஜி மீது, சேலையூர் காவல்துறையினர் பொய் வழக்குப் போட்டு அவசர அவசரமாக நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.அவரைப் பார்க்க வழக்கறிஞருடன் சென்று ஜாமீனில் எடுக்க வக்காலத்து சீட்டில் கையெழுத்து வாங்கி வந்தோம்.நேற்று காலை திடீரென அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறினர்.பின்னர் அவர் இறந்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.காவல்துறையினர் பொய் வழக்குப் போட்டு,அவரை அடித்துத் துன்புறுத்தி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து உயர் காவல்துறையினர் விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
இவ்வாறு கூறியுள்ளனர்.


