அக்கா மகனிடம் பேரம் பேசிய அன்புமணி – பாமக பரபரப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாமக இரண்டாக உடைந்து தேர்தலைச் சந்தித்து வருகிறது. மகன் அன்புமணி நிறுத்தும் வேட்பாளருக்கு எதிராக மருத்துவர் இராமதாசும் வேட்பாளரைக் களம் இறக்கியுள்ளார்.

தர்மபுரியில் தேர்தல் பரப்புரையின்போது அன்புமணியின் மகள்கள் சங்கமித்ரா, சம்யுக்தா ஆகியோர் ஜி.கே.மணியை கடுமையாகச் சாடினார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் இராமதாசுவின் மூத்தமகளும் பாமகவின செயல்தலைவருமான ஸ்ரீகாந்தி, பேரன் முகுந்தன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து, அன்புமணி குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

அன்புமணியின் மகள்கள் பொய்யான கண்ணீர் வடிப்பதாகவும், கிளிசரின் வைத்துக் கொண்டு நாடகம் ஆடுவதாகவும் இராமதாசு தெரிவித்திருந்தார்.

மருத்துவர் இராமதாசு அணியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை விலைக்கு வாங்குவதற்காக அன்புமணி பேரம் பேசியதாகவும், தன்னிடமும் பேரம் பேசப்பட்டது என்றும் முகுந்தன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் முகுந்தனிடம் அன்புமணி ஆதரவு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் பேசுவது (3 மாதத்துக்கு முன்பு) போன்ற தொலைபேசி உரையாடல் நேற்று வெளியாகியுள்ளது.

அதில், வரும் சட்டமன்றத் தேர்தலில் உங்களுக்கு வாய்ப்பு அளிக்க இருப்பதாகவும், கூட்டணி குறித்து இறுதி முடிவு எட்டப்பட்டவுடன் உங்களுக்கான தொகுதி ஒதுக்கி அதற்கான முழுச்செலவையும் அன்புமணி ஏற்றுக்கொள்வதாகவும், கட்சிப்பதவி குறித்து பின்னர் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என அன்புமணி கூறியதாக கணேஷ்குமார் பேசுவது இடம்பெற்றுள்ளது.

அன்புமணி பேரம் பேசுவதாக மருத்துவர் இராமதாசு கூறியிருந்த நிலையில், இந்த குரல்பதிவு வெளியாகியிருக்கிறது.ஓட்டுப்பதிவுக்கு நெருக்கமான இந்த நேரத்தில் இப்படி வெளியாகியிருப்பது அன்புமணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

Leave a Response