ஆங்கிலம் தெரியாமலே உலகெங்கும் 70 ஆயிரம் கல்விநிறுவனங்கள் உருவாக்கிய மாண்டிசோரி

கல்வி நிலையங்கள் பட்டதாரிகளை உருவாக்குவதோடு சமூகப் பொறுப்புள்ள குடிமக்களையும் உருவாக்க வேண்டும் என்று மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினார்.

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்வியியல் கல்லூரி, வேளாளர் செவிலியர் கல்லூரி ஆகியவற்றில் மக்கள் சிந்தனைப் பேரவைக் கிளைகள் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியதாவது:

ஆசிரியர், செவிலியர் ஆகிய இரண்டு துறைகளும் சமூகத்தின் அடித்தளங்களாக விளங்கும் துறைகள்.  கல்விக்கும் மருத்துவத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கிற நாடு நிச்சயம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். கல்வியியலுக்கு நம் கண்முன் பாடமாக நிற்பவர் மாண்டிசோரி அம்மையார். இவரின் வாழ்க்கை வரலாற்றை கல்வியியல் மாணவர்கள் அவசியம் முழுமையாக வாசிக்க வேண்டும்.

 ஒரு மருத்துவராக தனது பணியைத் தொடங்கி பள்ளி மாணவர்களுக்கு வித்தியாசமான கல்வியை முற்றிலும் புதிய அணுகுமுறையுடன் கற்றுத்தந்தவர் மாண்டிசோரி அம்மையார். இவர் பெயரை ஆங்கிலப் பள்ளிக் கூடங்கள் மட்டுமே தாங்கி நிற்கின்றன. ஆனால் தாய் மொழிக் கல்வியை வலியுறுத்தியவர் என்பது மட்டுமல்ல வாழ்நாள் முழுக்க ஆங்கிலம் தெரியாமலேயே வாழ்ந்து உலகெங்கும் எழுபதாயிரம் கல்வி நிலையங்களை உருவாக்கி மாபெரும் கல்விப் புரட்சியை உருவாக்கியவர் மாண்டிசோரி அம்மையார்.

அதேபோல பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உலக அளவில் செவிலியர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டி. கைவிளக்குடன் வலம் வந்த காரிகை என்று கவித்துவத்துடன் அழைக்கப்பட்டவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். போர்க் காலத்தில், காயம்பட்டுத் துடிதுடித்த வீரர்களுக்கு இரவு நேரங்களில் கைவிளக்கோடு சென்று மருத்துவம் செய்த மாபெரும் மனிதாபிமானியாக விளங்கியவர். எழுத்தாளர், புள்ளியியல் நிபுணர் என்ற பன்முகம் கொண்டவராக விளங்கினாலும் உலகச் செவிலியர்களுக்கெல்லாம் உந்துசக்தியாக விளங்கியவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல்.

கல்வி நிலையங்கள் மாணவர்களைப் பட்டதாரிகளாக உருவாக்குவதோடு சமூக வளர்ச்சிக்குப் பாடுபடுகிற மனிதநேயமிக்க சிறந்த மக்கள் ஊழியர்களாக உருவாக்க தனித்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில், வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், கல்வியியல் கல்லூரியின் முதல்வர் த.மல்லிகா, வேளாளர் செவிலியர் கல்லூரியின் முதல்வர் சீ.பிரபாவதி ஆகியோர் பேசினர்.

Leave a Response