
சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள பீகாரில், திடீரென வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்ற முகாம்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இந்த சிறப்பு முகாமில் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவை குடியுரிமை ஆவணங்களாக ஏற்கப்படவில்லை. இதனால் 65 இலட்சம் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பீகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட இந்த நடவடிக்கை கடும் எதிர்ப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கின. உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.
வாக்குகள் நீக்கம் குறித்து கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்த இராகுல் காந்தி, 65 இலட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக தீவிர போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் குளறுபடியைக் கண்டித்தும், பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்தும் பீகாரில் இராகுல் காந்தி, ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் ‘வாக்காளர் உரிமை யாத்திரை’ என்ற பெயரில் பேரணி நடத்தி வருகிறார். இந்த யாத்திரை பீகார் மாநிலம் முழுவதும் சுமார் 1,300 கி.மீ வரை என மொத்தம் 16 நாட்கள் நடத்தப்படவுள்ளது. இந்தப் பயணம் செப்டம்பா் 1 ஆம் தேதி பாட்னாவின் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைய உள்ளது. நடைப்பயணமாகவும், வாகன பயணமாகவும் 16 நாட்கள் 1,300 கி.மீ. தொலைவை கடந்து 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
இராகுல் காந்தியின் ப்யணத்தில் இலட்சக்கணக்கான மக்கள் அலைஅலையாகப் பங்கேற்று வருகின்றனர். இந்த நடைப்பயணத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் பங்கேற்று வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று பீகாரில் நடைபெறும் நடைப்பயணத்தில் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இராகுல்காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரை மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 7.35 மணியளவில் தனி விமானம் மூலம் சென்றார். தனி விமானத்தில் முதலமைச்சருடன், நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி, உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் சென்றனர்.
இந்த தனி விமானம் நேற்று காலை 10 மணியளவில் தர்பங்கா நகர விமான நிலையத்தைச் சென்றடைந்தது. விமான நிலையத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு, இராகுல்காந்தி தலைமையில் நடந்த பிரமாண்ட யாத்திரையில் பங்கேற்றார்.
இராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி, பிரியங்கா காந்தி, கனிமொழி ஆகியோர் பேரணியில் ஒரே வாகனத்தில் நின்று பயணம் செய்தனர். பேரணியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது….
உங்களை எல்லாம் பார்ப்பதற்காகத்தான் இரண்டாயிரம் கிலோ மீட்டர் கடந்து நான் இங்கே வந்திருக்கிறேன்.பீகார் என்றாலே, மரியாதைக்குரிய லாலு பிரசாத் யாதவ் தான் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். சமூகநீதி – மதச்சார்பின்மை ஆகியவற்றின் அடையாளம் அவர். தலைவர் கலைஞரும், லாலுவும் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். எத்தனையோ வழக்குகள் – மிரட்டல்கள் வந்தாலும், பாஜகவிற்கு பயப்படாமல் அரசியல் செய்த காரணத்தினால், இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார், லாலு பிரசாத். அவரின் வழித்தடத்தில், அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் தேஜஸ்வி.
கடந்த ஒரு மாத காலமாக, இந்தியாவே பீகாரைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதுதான் பீகார் மக்களின் பலம், இராகுல் காந்தியின் பலம், தேஜஸ்வியின் பலம். இந்தியாவின் ஜனநாயகத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம், அதற்கான போர்க்குரலை பீகார் எழுப்பியிருக்கிறது. இதுதான் வரலாறு. ‘லோக்நாயக்’ ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஜனநாயகத்தின் குரலை, சோசலிசத்தின் குரலை எதிரொலித்தார். அதற்காக மக்கள் சக்தியை அவர் திரட்டினார். அந்தப் பணியைத்தான், அருமை சகோதரர் இராகுல் காந்தியும், தம்பி தேஜஸ்வியும் இங்கு செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் செல்லும் இடம் எல்லாம், மக்கள் கடல் போல திரண்டு வருகிறார்கள். அதிலும், தேஜஸ்விகார் ஓட்ட, அதில் இராகுல் காந்தி பயணம் செய்த காட்சியை பார்த்தேன். ஏன், மோட்டார் சைக்கிள் பயணத்தையும் நான் பார்த்தேன். உங்களின் நட்பு, அரசியல் நட்பு மட்டும் கிடையாது; இரண்டு உடன்பிறப்புகளின் நட்பு.
ஜனநாயகத்தைக் காக்க – மக்கள் நலனுக்காக நீங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறீர்கள். பீகார் தேர்தலில் உங்களுக்கு வெற்றியைப் பெற்றுத்தர இருப்பதே இந்த நட்புதான். பாஜகவின் துரோக அரசியல் தோற்கப் போகிறது. தேர்தலுக்கு முன்பே உங்களின் வெற்றி உறுதியாகிவிட்டது. அதனால்தான் இந்த வெற்றியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். நியாயமாக – முறைப்படி வாக்குப்பதிவு நடந்தால், பாஜக கூட்டணி தோற்றுவிடும் என்று, மக்களான உங்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தை, ‘கீ’ கொடுத்தால் ஆடும் பொம்மையாக மாற்றிவிட்டார்கள். 65 இலட்சம் பீகார் மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது, ஜனநாயகப் படுகொலை. சொந்த மண்ணில், பிறந்து வாழ்ந்த மக்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதைவிட, பயங்கரவாதம் இருக்க முடியுமா?
அனைத்து அடையாள அட்டைகளை வைத்திருந்தாலும், அவர்களை அட்ரஸ் இல்லாதவர்கள் போன்று ஆக்குவது அழித்தொழிப்புதானே? சகோதரர்கள் இராகுலும் – தேஜஸ்வியும் பெற இருக்கும் வெற்றியைத் தடுக்க முடியாத பாஜக, கொல்லைப்புற வழியாக இந்த வேலையைப் பார்க்கிறது. இதற்கு எதிராக என்னுடைய சகோதரர்கள் முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தை வாழ்த்துவதற்காகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக, இராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடிகளையும் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதற்கு தேர்தல் ஆணையத்தால், முறையான ஒரு பதிலைக்கூட சொல்ல முடியவில்லை. ஆனால், இராகுல் காந்தி உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்; மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சொல்கிறார். இந்த மிரட்டலுக்கெல்லாம் இராகுல் காந்தி பயப்படுவாரா?
இராகுல் காந்தியின் வார்த்தைகளிலும் – கண்களிலும் எப்போதும் பயம் இருக்காது. இராகுல் காந்தியை பொறுத்தவரைக்கும், சும்மா அரசியலுக்காக – மேடைகளுக்காக பேசுபவர் கிடையாது. தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த கவனத்துடன் பேசுபவர் அவர். இப்போது ஏன் பாஜக அவர் மேல் பாய்கிறார்கள் என்றால், பாஜக – தேர்தலை எப்படி கேலிக்கூத்தாக்கிவிட்டது என்று இராகுல் காந்தி வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். அந்த ஆத்திரத்தில், பாஜகவினர் அவர் மேல் பாய்கிறார்கள். மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் பாஜகவின் அதிகாரத்தை, மக்கள் நிச்சயமாக பறிப்பார்கள்.
அதைத்தான் பீகாரில் இப்போது கூடியிருக்கும் இந்த கூட்டம் எடுத்துக் காட்டுகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கான அடித்தளத்தை இங்கிருக்கும் பாட்னாவில்தான் விதைத்தோம். எங்களுக்கு சமமான அரசியல் எதிரிகளே இல்லை; எதிர்க்கட்சிகள் ஒன்று சேர மாட்டார்கள் என்று நினைத்த பாஜகவின் கர்வத்தை தகர்த்த இடம்தான் இந்த பீகார். 400 இடம் என்று கனவு கண்டவர்களை, 240 இல் அடக்கியது இந்தியா கூட்டணி. மெஜாரிட்டி என்று ஆட்டம் போட்டவர்கள், மைனாரிட்டி ஆகிவிட்டார்கள். மக்கள் சக்திக்கு முன், எப்படிப்பட்ட சர்வாதிகாரியும் மண்டியிட்டுத்தான் ஆக வேண்டும் என்று மீண்டும் பீகார் நிரூபிக்க வேண்டும்.
அருமைச் சகோதரர் இராகுல் காந்தி அவர்களே, இன்றைக்கு இந்தியாவிற்கான வழக்கறிஞராக இருக்கிறீர்கள். உங்களால் இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும். இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கும். மக்கள் சக்திக்கு இணையானது எதுவுமில்லை என்று சகோதரர் தேஜஸ்வி காட்டிக் கொண்டிருக்கிறார். நீங்கள் இரண்டு பேரும் பீகாரில் பெறப்போகும் வெற்றிதான், இந்தியா கூட்டணியின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைய இருக்கிறது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் வெற்றி பெற்ற பிறகு நடைபெறும் வெற்றிவிழா கூட்டத்திலும் நிச்சயமாக – உறுதியாக நானும் பங்கேற்பேன்
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின், தர்பங்கா விமானநிலையத்தில் இருந்து நேற்று மதியம் 2 மணியளவில் தனி விமானத்தில் புறப்பட்டு நேற்று மாலை சென்னை வந்து சேர்ந்தார். பீகார் மாநிலத்தில் இராகுல் காந்தியின் நடைப்பயணத்திற்கு குவியும் மக்களின் கூட்டம் பாஜகவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் நேற்று அந்தப் பயணத்தில் கலந்து கொண்டு தமிழில் உரையாற்றிய மு.க.ஸ்டாலினுக்கு அங்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து பாஜக பெரும் பதட்டம் அடைந்திருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


