
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ என்ற அமைப்பை உருவாக்கி தனது ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகிறார்.இந்த அமைப்பு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்பட்டுவந்தது.
இந்தச் சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார். இந்தக் கூட்டணி வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிட உள்ளது.இதனால் ஓபிஎஸ் அணி அக்கூட்டணியில் தொடர்கிறதா? என்கிற கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.
அதற்கு, தாங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து வந்தார்.
இதற்கிடையே ஜூலை 26, 27 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை, நேரில் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தியும் கோபமும் அடைந்தார்.அதைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் தேசிய சனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முடிவு எடுக்கப்பட்டது.அம்முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேசிய சனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் இணைக்க பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது.பாஜகவின் பி.எல்.சந்தோசை சந்திக்க வருமாறு தொலைபேசி வாயிலாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.இன்று தமிழ்நாடு வரும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோசை சந்திக்க ஓபிஎஸுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.மேலும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வரும்போது சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதி கூறப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த அழைப்புக்குப் பிறகு, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், உரிமை மீட்புக் குழுவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசித்து தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.
தேசிய சனநாயகக் கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் விலகுவதாகச் சொல்லிவிட்டதால் மகிழ்ச்சியில் இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.இப்போது, மீண்டும் ஓபிஎஸுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளதால் அதிர்ச்சி அடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.


