
15அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28, 29. 30 ம்தேதிநடைபெற உள்ள தொடர்மறியல் போராட்டம் குறித்த மாவட்ட ஆயத்தமாநாடு கரூரில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு சார்பில் கரூர் தாந்தோணிமலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு மாவட்ட தொடர்பாளர்கள் ராஜேந்திரன், வேலுமணி, தலைமை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில துணைசெயலாளர் சண்முகநாதன், தமிழ்நாடு பதவிஉயர்வு பெற்ற முதுநிலைபட்டதாரிஆசிரியர் சங்க பொருளாளர் தமிழ்மணியன் கவன ஈர்ப்பு உரையாற்றினர். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் கருப்புசாமி, அமுதன், மாசிலாமணி உள்ளிட்டோர் பேசினர்.
போராட்டத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள்….
தமிழக அரசின் நலத்திட்டங்களில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் இதில் ஈடுபடுத்தப்படுவதால் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதாக ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
6வது ஊதியக் குழுவில் தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நடுவண்அரசு வழங்குவது போல ஊதியம் சமமாக வழங்கப்படவில்லை. தரஊதியத்துடன் கூடிய ஊதியத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்ததற்கு ஏற்ப தமிழக அரசு தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நீக்கம் செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஒப்பந்தஅடிப்படை, தொகுப்பூதிய நியமன ஆசிரியர்களை பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.
பள்ளிக்கல்வி த்துறையில் பகுதிநேரப்பணி காலத்தில் பணியாற்றிய தொழிற்கல்வி ஆசிரியர்கள் உள்பட 50 சதவீத பணிக்காலத்தை ஓய்வு ஊதியத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
தாய்மொழி தமிழ்ப்பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணையை திருத்தம் செய்து தமிழ்ப்பாடத்தை முதல்பாடமாக வைக்க வேண்டும்.
தொடக்கப்பள்ளிகள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை தமிழக அரசின்சார்பில் 14நலத் திட்டங்கள் மாணவர்களுக்கு செயல்படுத்தப்படுகிறது. தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் இதில் ஈடுபடுவதால் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே தனியாக நலத்திட்ட அலுவலரை நியமிக்க வேண்டும்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் சமீபகாலமாக சமூகவிரோதிகள் தலையீடு தொடர் நிகழ்வாக உள்ளது. எனவே தமிழக அரசு ஆசிரியர்களின் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.


