தமிழர்கள் தாழ்வு மனப்பான்மையைக் கைவிட வேண்டும்–சீமான் வேண்டுகோள்

தமிழர்கள் தாழ்வு மனப்பான்மையைக் கைவிட்டால்தான் ஆரோக்கியமான சமூக வளர்ச்சி ஏற்படும் என்று நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் கூறினார்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

காமராஜர் ஆட்சியில்தான் தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும் ஏற்பட்டன. ஆனால், 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சிகளால் எந்த விதமான தொலைநோக்குத் திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. மாறாக லஞ்சம், ஊழல்களே மேலாங்கின.

இதில் திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஒரே நிலைபாட்டையே கொண்டுள்ளன. மத்திய அரசிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. மீனவர் பிரச்னைகளைத் தீர்க்க முடியாமல் அரசுகள் பொறுப்பின்றி செயல்படுகின்றன.

உலக முதலாளிகளின் தொழிற்சாலைகளைக் கொண்டு வருவதாகக் கூறும் மத்திய, மாநில அரசுகள், விவசாயத்தைக் கண்டு கொள்ளவில்லை. இதனால்தான் பருப்பு, வெங்காயம் விலை உயர்ந்து வெளிநாட்டில் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார்  சீமான்.

Leave a Response