தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021 – போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க. கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனைப்போட்டி காணப்படுகிறது.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஆண்கள் சார்பில் 6 ஆயிரத்து 183 மனுக்கள், பெண்கள் சார்பில் 1,069 மனுக்கள், திருநங்கைகள் சார்பில் 3 மனுக்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 16 தொகுதிகளில் 636 வேட்புமனுக்கள் பெறப்பட்டிருந்தன. இந்தநிலையில் 234 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை மார்ச் 20 ஆம் தேதி நடைபெற்றது.

மொத்தம் 4 ஆயிரத்து 506 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாத 2 ஆயிரத்து 741 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதில் நெல்லை தொகுதி அ.ம.மு.க., ச.ம.க. வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

வேட்புமனுக்கள் பரிசீலினை அடிப்படையில் 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 506 பேர் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றனர். இந்தநிலையில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கடைசி நேரத்தில் போட்டியிட விரும்பவில்லை என்று எண்ணும் வேட்பாளர்கள் தங்களுடைய மனுவை திரும்பப் பெற்று கொள்வதற்கு நேற்று மதியம் 3 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று பலர் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றனர். அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 11 சுயேச்சை வேட்பாளர்களும், அறந்தாங்கியில் 9 சுயேச்சை வேட்பாளர்களும், விருத்தாசலம், பெரியகுளம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தலா 8 சுயேச்சை வேட்பாளர்களும், துறைமுகத்தில் 7 சுயேச்சை வேட்பாளர்களும், அண்ணாநகர், குடியாத்தம், சேலம் தெற்கு, ஒட்டன்சத்திரம், லால்குடி, கீழ்வேளூர், மதுரை மத்தியம், ராஜபாளையத்தில் தலா 6 சுயேச்சை வேட்பாளர்களும், வேப்பனஹல்லி, குமாரபாளையம், பழனி, சிவகாசியில் தலா 5 சுயேச்சை வேட்பாளர்களும், ராமநாதபுரம், திருமங்கலம், மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, சிதம்பரம், கடலூர், திருப்பூர் வடக்கு, போளூர், கலசபாக்கம், பர்கூர், கும்மிடிப்பூண்டியில் தலா 4 சுயேச்சை வேட்பாளர்களும், ஆர்.கே.நகர், சோளிங்கர், ஜோலார்பேட்டை, ஊத்தங்கிரி, சங்ககிரி, நாமக்கல், ஈரோடு மேற்கு, உடுமலைப்பேட்டை, நத்தம், மயிலாடுதுறை, வேதாரண்யம், பேராவூரணி, சோழவந்தானில் தலா 3 சுயேச்சை வேட்பாளர்களும் என ஒட்டுமொத்தமாக 294 பேர் வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகி உள்ளனர்.

இதையடுத்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் இறுதிப் பட்டியல் நேற்று மாலை வெளியானது. அதன்படி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 220 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 77 பேரும், குறைந்தபட்சமாக வால்பாறை தொகுதியில் 6 பேரும் போட்டியிடுகின்றனர்.

சென்னையில் அடங்கி உள்ள 16 தொகுதிகளில் 391 பேர் களம் காண்கின்றனர். இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் களம் காணும் கொளத்தூர் தொகுதியில் 35 பேரும், குறைந்தபட்சமாக தியாகராயநகரில் 14 பேரும் போட்டியிடுகின்றனர்.

Leave a Response