
முன்னாள் முதலமைச்சர் செயலலிதா மறைவுக்குப் பின் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் சசிகலா அக்கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பெயரில் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உள்ள நிலையில் கட்சி விரோதமான செயல்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களும் மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியிருந்தார்கள். அவைத் தலைவராக மதுசூதனன், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டது செல்லாது.பொதுக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பாக தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், வழக்கில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன் பின்னர், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு பட்டியலிடப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது.
தற்போது பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழகம் திரும்பியுள்ளார். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரிய சசிகலா தொடர்ந்த வழக்கை உடனே விசாரிக்க சிவில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சசிகலாவின் முறையீட்டை மார்ச் மாதம் 15 ஆம் தேதி விசாரிப்பதாக சிவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் அதிமுகவைக் கைப்பற்றும் முயற்சியில் சசிகலா தீவிரமாக இறங்கிவிட்டார் என்றும் அதன் முதல்படியே இம்முறையீடு என்றும் சொல்லப்படுகிறது.


