கூடங்குளம் அணு உலையில் அடிக்கடி பழுது- அணுசக்திக் கழக இயக்குநர் ஒப்புதல்.

கூடங்குளம் அணுஉலையில் அடிக்கடி பழுது ஏற்படுவது உண்மைதான். இந்த காரணங்களால்தான் அதில் முழுமையாக மின்உற்பத்தி செய்ய முடியவில்லை என்று பாபா அணுசக்தி கழக இயக்குனர் சேகர் பாசு கூறினார்.

சென்னை விமான நிலையத்தில், பாபா அணுசக்தி கழக இயக்குனர் சேகர்பாசு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கல்பாக்கத்தில் 500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய துரித மின் உற்பத்தி அதிநவீன அணுஉலை ஒன்றை அமைத்து வருகிறோம். தற்போது, அது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. அந்த பணிகள் முடிவடைந்ததும் முதலில் சோதனை அடிப்படையில் எரிபொருளுக்கு பதிலாக சோடியத்தை நிரப்பி பரிசோதனை நடத்துவோம்.

அதன் முடிவு முழு திருப்தி அளித்தால் இறுதியாக எரிபொருளை நிரப்பி மீண்டும் சோதனை நடத்தப்படும். இந்த பணிகள் எல்லாம் முடிந்து இந்த ஆண்டு இறுதிக்குள் கல்பாக்கத்தில் அந்த அதிநவீன அணு உலையில் இருந்து மின் உற்பத்தியை தொடங்கி விடலாம் என்று உறுதியாக நம்புகிறோம்.
கூடங்குளம் முதல் அணு உலையில் அடிக்கடி பழுது ஏற்படுவது உண்மைதான். அதை உடனுக்குடன் சரி செய்து விடுகிறோம். அதில், முழு திறனான 1000 மெகாவாட் மின் உற்பத்தி 4 மாதங்களுக்கு மட்டுமே செய்ய முடிந்தது. தற்போது அது 600 மெகாவாட்டாக குறைந்து விட்டது. அதை, தொடர்ந்து பராமரித்து வருகிறோம். புதிய அணு உலையில் இதுபோன்று பிரச்னை ஏற்படுவது சகஜம்தான். அதனால் மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response