
ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக ஒபிஎஸ், இபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்தது. அதில் ஒபிஎஸ் அணியில் மூத்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கண்ணப்பன், கே.பி.முனுசாமி, செம்மலை, செஞ்சி ராமச்சந்திரன், பொன்னையன், எம்பி மைத்ரேயன், பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், உள்ளிட்ட பலர் இணைந்தனர்.
மத்திய ஆட்சியிலிருக்கும் பாஜக ஆதரவுடன் ஓபிஎஸ் இருந்ததால் பெரும்பாலான அதிமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக மாறினர்.
பாஜகவின் கட்டாயத்தில் ஒரு கட்டத்தில் அணிகள் ஒன்றாகின.ஓபிஎஸ் துணை முதல்வரானார். ஆனால் ஒபிஎஸ் அணியில் இருந்தவர்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டனர்.
மைத்ரேயன் மாநிலங்களவையில் முக்கிய பொறுப்பை எதிர்ப்பார்த்தார் கிடைக்கவில்லை. பி.எச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் செயல்பாடின்றி உள்ளனர். செம்மலைக்கு உரிய பொறுப்பு வழங்கப்படவில்லை.
இதேபோன்றுதான் பலரது நிலையும் உள்ளது என்று தெரிவிக்கின்றனர். கவிஞர் சிநேகன் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துவிட்டார். ஒபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரான கே.சி.பழனிசாமி பின்னர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
ஒபிஎஸ்சின் தீவிர ஆதரவாளரான ராஜ கண்ணப்பன் தனக்கு ராமநாதபுரம் அல்லது சிவகங்கை அல்லது மதுரை தொகுதியில் ஏதாவது ஒரு இடத்தில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார்.சிவகங்கையில் எச்.ராஜாவுக்காக பாஜகவுக்கு சீட்டு ஒதுக்கப்படும், ராமநாதபுரம் கட்டாயம் கிடைக்கும் என எதிர்ப்பார்த்திருந்தார். ஆனால் ராமநாதபுரமும் பாஜகவுக்கே ஒதுக்கப்பட்டு, மதுரை ராஜன் செல்லப்பாவின் மகனுக்கு ஒதுக்கப்பட்டதால் ஆத்திரத்தில் வெளியேறி திமுகவை ஆதரிக்கும் முடிவெடுத்துள்ளார்.
அதோடு, நம்பி வந்தவர்களுக்கு ஒபிஎஸ் துரோகம் செய்துவிட்டாரா? என்கிற கேள்விக்கு கண்டிப்பாக துரோகம் செய்துவிட்டார். அவருடைய மகனுக்கு சீட்டு வாங்குவதற்காக கட்சியையே அடகு வைத்துவிட்டார். என கண்ணப்பன் தெரிவித்தார்.
அதேபோல் 20 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் இப்போது எம்பியாக இருக்கும் 6 பேருக்கு மட்டும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மீதி 14 அதிமுக எம்பி களும் ஓபிஎஸ்ஸை நம்பி நாசமாப் போனோம் என்று புலம்பி வருகிறார்களாம்.


