மகன் உயிரைக் காவு கொண்ட தந்தையின் குடி – திருப்பூரில் பெரும் சோகம்

திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த அருமைக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 38). அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பிரகாஷ் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பேபி (34). இவர்களுக்கு ஹரிஹரன் (14) என்ற மகனும், 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

அனுப்பர்பாளையத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் ஹரிகரன் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

பிரகாசிற்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே பிரகாஷை மது குடிப்பதை நிறுத்துமாறு குடும்பத்தினர் கூறி வந்துள்ளனர்.ஆனால் பிரகாஷ் மது குடிப்பதை நிறுத்தவில்லை. ஹரிகரனும் தனது தந்தையிடம் மதுகுடிக்கும் பழக்கத்தை கைவிடுமாறு பலமுறை மன்றாடினான். ஆனால் பிரகாஷ் எதையும் பொருட்படுத்தாமல் மதுகுடிக்கும் பழக்கத்தை தொடர்ந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்றும் பிரகாஷ் வழக்கம் போல குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பிரகாசுக்கும், பேபிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ஹரிஹரன் அருகில் உள்ள பாட்டி சிந்தாமணி வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஹரிஹரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தந்தை மது குடிக்கும் பழக்கத்தை விடாததால் மனம் உடைந்த மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மதுப்பழக்கம் எவ்வளவு பேரைத்தான் காவு கொள்ளுமோ?

Leave a Response