இன்றுமுதல் திரையரங்குகளில் தேசிய கீதத்துக்கு முடிவுரை

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை தற்போதைக்குத் திரும்பப் பெற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. பழைய உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது. இதன் காரணமாக, மறு உத்தரவு வரும்வரை திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயமில்லை.

கடந்த 2016 நவம்பர் 3-ம் தேதி நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது கட்டாயம் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கேரள திரைப்பட சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் விசாரித்தனர். அப்போது பழைய உத்தரவில் திருத்தம் செய்யலாம் என்று நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (சனவ்ரி 8,2018 திங்கள்கிழமை) பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பான விதிகளை வரையறுக்க அனைத்து அமைச்சரவைகளைச் சேர்ந்த உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 6 மாதங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும். அதுவரை திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் என்ற உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு இன்று (சனவரி 9,2018 செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், “திரையரங்குகளில் திரைப்படத்தைத் திரையிடும் முன்னர் தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் இல்லை. பழைய உத்தரவை இந்த நீதிமன்றம் திருத்துகிறது. மத்திய அரசின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.தேசிய கீதம் இசைப்பது தொடர்பான விதிகளை வரையறுக்க மத்திய அரசு அமைத்துள்ள அனைத்து அமைச்சரவைகளை சேர்ந்த உயர்நிலைக் குழு இறுதி முடிவை எடுக்கும்” எனத் தெரிவித்தது.

ஆக, மறு உத்தரவு வரும்வரை திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படாது.யாரும் எழுந்து நிற்க வேண்டியதில்லை.

Leave a Response