
”மதுரையில் கிரானைட் முறைகேடு விசாரணைக்காக இரவில் மயானத்தில் படுத்திருந்த போது, ஆவிகளுக்கு பயப்படவில்லை; முறைகேடு செய்த பாவிகளை நினைத்து தான் பயந்தேன்,” என சென்னை அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் சகாயம் பேசினார்.
மதுரை பாத்திமா கல்லுாரியில், கல்லுாரி தின விழா நடந்தது. சகாயம் பேசியதாவது:
நேர்மையான தேர்தலை நடத்த இதே மார்ச்சில் தான், நான் மதுரை கலெக்டராக பொறுப்பேற்றேன். மாணவர்கள் ஆழ்ந்து சிந்தித்து நேர்மையான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.மதுரையில் கிரானைட் முறைகேடு விசாரணைக்காக இரவில் மயானத்தில்படுத்திருந்த போது, ஆவிகளுக்கு பயப்படவில்லை, முறைகேடு செய்த பாவிகளை நினைத்துத் தான் பயந்தேன்.
மாணவர்கள் தங்கள் இலக்குகளை தாங்களே நிர்ணயித்து, நம்பிக்கையுடன் படித்தால், திறமையான ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக முடியும். ஏழைகளின் கடைசி ‘கல்வி நம்பிக்கை’ அரசு பள்ளிகள் தான். அதனால் தான் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழை வளர்க்கிறார்கள்.
வகுப்பறை பாடங்களை தாண்டி ஒரு உலகம் இருக்கிறது, மாணவர்கள் அந்த வெளியுலக அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும். அதே நேரம் மாணவர்கள் இந்த தேசத்தை மாற்றும் சக்தியாகவும் திகழ வேண்டும், என்றார்.
விழாவில் கல்லுாரி முதல்வர் பாத்திமா மேரி, செயலாளர் பிரான்சிஸ் பாலின், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.


