1இலட்சம் கோடியிலிருந்து 4 இலட்சம் கோடியாக தமிழகத்தின் கடன்சுமை அதிகரிப்பு- இதுதான் ஜெ செய்த சாதனையா?

கடந்த தி.மு.க., ஆட்சியில், அரசின் கடன், ஒரு லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதை, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த, அ.தி.மு.க., கடுமையாக விமர்சித்தது. இது, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெளியிட்ட, தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்றது.
*சிறப்பு திட்டங்கள் மூலம், தமிழகத்தை பன்முக சமூக, பொருளாதார வளம் பெற்ற மாநிலமாக மாற்றி, 1.20 லட்சம் கோடி ரூபாய், கூடுதல் வருமானத்தை, ஐந்து ஆண்டுகளில் ஈட்ட, நடவடிக்கை மேற்கொள்வோம்
*பிரத்யேக திட்டங்களின் மூலம், தமிழகத்தை, ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்ற தலை குனிவில் இருந்து மீட்டு, ஒவ்வொரு தமிழரும், தலை நிமிர்ந்து நிற்கவும், தன்மானத்துடன் வாழவும் வழிவகை செய்யப்படும்.இவ்வாறு, தேர்தல் அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டிருந்தது.அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தது; ஆனால், கடன் தொகை குறைவதற்கு பதிலாக, இரண்டு மடங்கு கூடியுள்ளது. கடனாளிமாநிலம் என்ற தலை குனிவில் இருந்து, தமிழகத்தை மீட்போம் என்றனர்; ஆனால், இன்று ஒவ்வொருவர் தலையிலும், 28,778 கோடி ரூபாய் கடன் சுமையை ஏற்றியுள்ளனர். மின் கட்டணத்தை, 37 சதவீதம் உயர்த்தியும், மின்வாரியத்தின் கடன், ஒன்றரை லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. பொதுத்துறை நிறுவனங்களின் கடனை சேர்த்தால், தமிழகத்தின் மொத்த கடன் சுமை, 4 லட்சம் கோடி ரூபாயை தாண்டும். அதேபோல் பட்ஜெட் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டோம் என, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் அறிவித்தார். ஆனால், கடனில் இருந்த தமிழகத்தை மீட்டு, தமிழரை தலை நிமிரச் செய்வோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாதது குறித்து, எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

சட்டசபை விவாதத்தின் போது, கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பிய கேள்விக்கு, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பதில் கூறும்போது, ‘வாங்கிய கடன் மூலதனத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. நிதிக்குழு பரிந்துரையின்படி, கடன் வரையறைக்குள் உள்ளது’ என விளக்கம் அளித்தார்.

‘தி.மு.க., ஆட்சி கடன், ஒரு லட்சம் கோடியாக இருந்தபோது, கடுமையாக விமர்சித்தீர்கள்; தற்போது, கடன் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இப்போது விளக்கம் தருகிறீர்கள். எதிர்க்கட்சியாக இருந்தால் விமர்சனம், ஆளும் கட்சியாக இருந்தால் விளக்கமா?’ என, எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு, ஆளும் தரப்பில் பதில் இல்லை. இதெல்லாம், தேர்தல் பிரசாரத்தில், எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட உள்ளன. எப்படி எதிர்கொள்ளப் போகிறதோ, ஆளும் வட்டாரம்.

Leave a Response