நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் சின்னமாக ‘இரட்டை மெழுகுவர்த்தி’ தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிடுகிறது. எங்களுக்கு தேர்தல் சின்னமாக ‘இரட்டை மெழுகுவர்த்தி’ ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை எங்கள் எண்ணத்தில் பற்றி எரிந்த நெருப்பு, தற்போது சின்னத்தில் எரிகிறது. மெழுகுவர்த்தி தன்னை வருத்திக்கொண்டு ஒளி கொடுப்பதுபோல, எங்களை வருத்திக்கொண்டு தமிழக மக்களுக்கு ஒளி தர பாடுபடுவோம்.
நாம் தமிழர் கட்சிக்கு செலுத்தும் ஒவ்வொரு வாக்கும் இனம், தன்மானம் காக்கும். அமைப்பு, அடிப்படை, அரசியல் ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்தி நல்லாட்சி தருவதும் இலவசத்தை ஒழிப்பதும்தான் எங்கள் நோக்கம்.
இலவசம் வழங்காமல் வாழ்க்கை தரத்தை உயர்த்தவேண்டும் என்பதுதான் எங்களுடைய கட்சியின் நிலைப்பாடு. வியர்வை சிந்தி உற்பத்தி செய்யும் அரிசியை இலவசமாக தருவது, விவசாயியை அவமதிக்கும் செயல். பசி இல்லாத நிலை, வேலையில்லாத நிலையை உருவாக்குவோம். விரைவில் வரைவு அறிக்கை வெளியிடப்படும்.
செயற்கை மது வகைகள் ஒழிக்கப்பட்டு நம் மண் சார்ந்த தென்னை பால், பனை பால் (கள்) மூலிகை சாறு ஊக்குவிக்கப்படும். இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். மண் வளம் சார்ந்த தொழிற்சாலைகள் நிறுவப்படும். அகதிகள் முகாமை மூடி, அகதி என்ற சொல்லை அழித்து நம் சொந்தங்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவோம். தூய தமிழகத்தை மலரச்செய்ய தேர்தல் ஆணையம் துணை நிற்கவேண்டும்.
பணத்தை கொடுத்து வாக்கு வாங்குவதை தடுத்து நிறுத்தவேண்டும். வெளிப்படையான நிர்வாகத்தை தந்து, காமராஜரை விட எளிமையாக இருப்போம். கொள்கை ரீதியாக கூட்டணிக்கு உடன்பட்டால் ஆதரிப்போம். அ.தி.மு.க.-தி.மு.க. ஒன்றும் பெரிய கட்சிகள் அல்ல. பலவீனத்தை உணர்ந்த கட்சிகள்தான் கூட்டணி அமைக்கும்.
இவ்வாறு சீமான் கூறினார்.


