ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு ஆஸ்கர் மேடையில் தமிழ் பேசிய தமிழர்

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள் பிரிவில் அமெரிக்க வாழ் தமிழரான கொட்டலாங்கோ லியோன், ஆஸ்கர் பரிசைப் பெற்றார். அவருக்கு இந்த விருது பிப்ரவரி 13 அன்று வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதுகள் நேற்று வழங்கப்பட்டதையடுத்து லியோனின் சாதனைக்குச் சமூகவலைத்தளத்தில் புதிய கவனம் கிடைத்துள்ளது.

itview என்கிற சோனி நிறுவனத்தின் மென்பொருள் உருவாக்கத்தில் பங்கேற்றதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அந்த மென்பொருள், திரைத்துறையினருக்கு மிகவும் பயன்தரக்கூடியதாக உள்ளதால் இந்தப் பெருமை லியோனுக்குக் கிடைத்துள்ளது.

லியோன், தூத்துக்குடியில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்தவர். 7-வது வரை அரசுப் பள்ளியில் படித்தவர். 1988 முதல் 1992 வரை கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் என்ஜினியரிங் படித்தார். டெல்லியில் இரண்டு வருடங்கள் பணிபுரிந்தவர் பிறகு 1994-ல், கிராபிக்ஸ் துறையின் மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். ஸ்பைடர் மேன், மென் இன் பிளாக் உள்ளிட்ட பல படங்களில் அவர் பணிபுரிந்துள்ளார்.

ஆஸ்கர் விருதுகள் நேற்று வழங்கப்பட்டதையடுத்து லியோனின் சாதனை மீண்டும் கவனத்துக்கு வந்துள்ளது. லியானார்டோ டி காப்ரியோவைப் பற்றி பேசும் நாம் லியோனின் சாதனையைப் பற்றியும் பேசவேண்டும் என்கிற போஸ்டர்களை சமூகவலைத்தளத்தில் காணமுடிகிறது.

லியோனின் தாயாரும் சகோதரரும் கோயம்புத்தூரில் வசித்து வருகிறார்கள். இந்த ஆஸ்கர் விருதுக்குச் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்.

ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு ஆஸ்கர் மேடையில் தமிழ் பேசிய இரண்டாவது தமிழன் என உலகமே அவரைக் கொண்டாடி வருகிறது.

Leave a Response