
2021 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதன்பின்,2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அதிமுக பாஜக கூட்டணி முறிந்தது. இதற்கு அண்ணாமலைதான் காரணம் என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியிருந்தார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் நடந்து வந்தது.
இந்நிலையில்,2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக விரும்பியது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பிடிகொடுக்காமல் இருந்தார். இந்நிலையில்தான், அவரது உறவினர் இராமலிங்கம் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.இதில், ரூ.650 கோடி வரி ஏய்ப்பு நடந்தது என்று சொல்லி எடப்பாடி பழனிச்சாமியை டெல்லிக்கு அழைத்துப் பேசிய அமித்ஷா, பாஜவுடன் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டும். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோரைக் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிபந்தனைக்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்கவில்லை. கூட்டணிக்குச் சம்மதம் தெரிவித்த எடப்பாடி, முன்னாள் நிர்வாகிகளைச் சேர்க்க மறுத்து வருகிறார். இதன் காரணமாக, எடப்பாடி பழனிச்சாமியுடன் கடந்த சில நாட்களாக மோதும் செங்கோட்டையனை டெல்லிக்கு அழைத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்கிய ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் அமித்ஷாவையும் செங்கோட்டையன் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி இல்லாத அதிமுகவை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், வருகிற 6 ஆம் தேதி இராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடியை மதுரை விமானநிலையத்தில் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க மோடியே நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே, டெல்லியில் இருக்கும் தம்பிதுரை, திடீரென நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அதேநேரத்தில் சி.வி.சண்முகம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த இரு சந்திப்புகளின்போதும் ஒருங்கிணைந்த அதிமுகவுடன்தான் பாஜக கூட்டணி அமைக்கும். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி இடையூறாக இருந்தால், அவரை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து எடுத்து விட்டு புதியவரை பொதுச் செயலாளராக போட்டு, அவர்களுடன் பாஜக கூட்டணி அமைக்கும் என்று இரு ஒன்றிய அமைச்சர்களும் முன்னாள் அமைச்சர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு அதிமுகவினரை பாஜகவினர் வெளிப்படையாக மிரட்டி வருவது குறித்து அதிமுக தொண்டர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.


