திமுக அனுப்பிய வக்கீல் நோட்டீசு – போட்ட ட்வீட்டை நீக்கிய பாஜக

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கான @BJP4TamilNadu என்ற பக்கத்தில் மார்ச் 30 ஆம் தேதியன்று தி.மு.க. குறித்த பதிவு ஒன்று வெளியானது. அதில், “தொகுதி வளர்ச்சி நிதியை சொந்தக் காசாகக் காட்டிய @arivalayam; இல்லாத தோரணை உருவாக்க 380 கோடி செலவாக்கும் @mkstalin; சொந்த மக்களுக்கு வெறும் ஒரு கோடி கொடுக்கத்தான் மனசாட்சி உள்ளதா? ஆட்சியில் இருந்து தேன் எடுத்தபோது ஊழல் செய்து புறங்கையை நக்கிய பணத்தை மக்களுக்கும் தாராளமாகக் கொடுக்கலாமே” என்று கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் விடுத்திருக்கும் வக்கீல் நோட்டிசில், இது முழுக்க முழுக்க அவதூறானது என்றும் தி.மு.கவின் சார்பில் ஒரு கோடி ரூபாயும் ஒவ்வொரு எம்.எல்.ஏ., எம்.பிக்களும் தங்கள் ஊதியத்தையும் வழங்கியிருப்பதோடு, தி.மு.கவின் தலைமையகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தையும் தனிமைப்படுத்துதலுக்காக வழங்க முன்வந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, பா.ஜ.கவின் சார்பில் கொரோனா நிதிக்கு எந்தத் தொகையும் தரப்படவில்லை என்று கூறியுள்ளனர்.

மேலும் கொரோனா போன்ற கொடிய நோய் பரவிவரும் நேரத்தில் மக்களுக்கு உதவாமல் அரசியல்செய்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ள தி.மு.க., தற்போது மாநிலத் தலைவராக உள்ள எல். முருகன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்தபோது அந்தப் பதவியைப் பயன்படுத்தி முரசொலி டிரஸ்ட் அமைந்துள்ள கட்டடம் குறித்து பொய் பிரசாரம் செய்ய முயன்றதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் அரசியல் கட்சிகளுக்குப் பணம் கொடுத்ததாகவும் தி.மு.கவின் தேர்தல் பிரசார வியூக வகுப்பாளர் பிராந்த் கிஷோருக்கு பணம் கொடுத்ததாகவும் ஒரு மீமை பகிர்ந்ததையும் இந்த நோட்டீசு சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே, உடனடியாக இந்த ட்வீட்களுக்காக பா.ஜ.கவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவும் மாநிலத் தலைவர் எல். முருகனும் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் கொரோனா தொடர்பான முதல்வரின் நிதிக்கு 100 கோடி ரூபாய் நிதி அளிக்க வேண்டுமென்றும் தி.மு.க. கூறியுள்ளது.

திமுக வக்கீல் நோட்டிசு விட்டதும் அந்த ட்வீட்டை நீக்கிவிட்டது பாஜக.

Leave a Response