தஞ்சையைக் களமாகக் கொண்டு செயல்படும் செம்மைவனம் அமைப்பு. அண்மையில் பொங்கல்கொண்டாட்டத்தை மிகச்சிறப்பாக நடத்திமுடித்தது. அதைத்தொடர்ந்து வருகிற மே மாதம் 3 ஆம் நாள் ஒரு புதிய கொண்டாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அதன் பெயர் பிரண்டைத் திருவிழா. அது பற்றி செம்மைவனத்தின் அமைப்பாளர் செந்தமிழனின் பதிவு…..

கொண்டாட்டங்களுக்குக் காரணம் தேவையில்லை. வாழ்க்கையே கொண்டாட்டம்தான். ஆனால், வாழ்வதைக் காட்டிலும் பிழைப்பதே முதன்மையானதாக மாற்றப்பட்டுவிட்ட சூழலில், உறவுகளுடன் மகிழவும் கூடிக் குலாவவும் ஏதேனும் விழாக்கள் தேவைப்படுகின்றன. அந்த விழாக்களையும் ‘நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழங்கும்’ கொள்ளையர்கள் சூறையாடி விடுகின்றனர். விடிந்தது முதல் அடங்கும் வரைக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்னால் அமர்வதில் அந்த நாளும் அழிக்கப்படுகிறது.
ஒரு நாள் முழுவதும் வெட்ட வெளியில் கொண்டாட்டத்திலேயே கழிக்கும் விருப்பம் ஏறத்தாழ எல்லோருக்கும் இருக்குமென எண்ணுகிறேன். குழந்தைகளின் விளையாட்டுகள், குடும்பம் குடும்பமாக சேர்ந்தாடும் ஆடல்கள், முறுக்கேற வைக்கும் இசை நிகழ்ச்சிகள், பலவகை மூலிகைகளின் அறிமுகம், மருந்துகளே இல்லாமல் வாழும் மக்களின் அனுபவப் பகிர்வுகள், விதவிதமான உணவுகள், முன்னோர்களின் மெய்யறிவைக் காட்சிப்படுத்தும் கூடங்கள் உள்ளிட்ட எண்ணற்ற நிகழ்வுகளுடன் ஒரு கொண்டாட்டம் சென்னையில் நிகழ உள்ளது.
செம்மை அமைப்பின் உறுப்பினர்கள், தன்னார்வர்கள், குடும்பத்தினர் இணைந்து அந்தக் கொண்டாட்டத்தை ஒருங்கிணைக்கிறார்கள். அதன் பெயர், ’பிரண்டைத் திருவிழா’ என்பது. பிரண்டைக் கொடி வறட்சியிலும் மழையிலும் பனியிலும் பசுமை மாறாமல் படரவல்லது. அதன் இலைகளும் தண்டுகளும் இளந்தளிர்களும் இயற்கையின் சிறப்பு ஓவியங்கள். அதன் தண்டுகளை ஒடித்து மண்ணில் நட்டால், துளிர்கள் வந்துவிடும்.
பிரண்டைக் கொடி வலுவானது, நார்கள் நிறைந்தது, எளிதாக அறுக்கவியலாது. பிரண்டை சிறந்த உணவு, மிகச் சிறந்த மருந்து. காட்டில் மேயும் கால்நடைகளாலும் பிற விலங்குகளாலும் பிரண்டையை எளிதாக மேய்ந்துவிட முடியாது. அதன் தோலில் உள்ள சாறு, நாக்கைத் துன்புறுத்தும்.
பலவகைக் காட்டுக் கொடிகள் போலவே, பிரண்டை தனியாக வாழாது. புதர்ச் செடிகளின் மீதும் வேலிகளின் மீதும் இணைந்து படர்ந்து வாழும். பிரண்டையைக் கொடியை உலர்த்தி எரித்து எடுக்கப்படும் உப்பு, சித்த மருத்துவத்தின் கற்பக மருந்துகளில் ஒன்று. அதில் தைலம் காய்ச்சினால் நீண்டகால வலிகளையும் ஒழிக்கவல்லது.
பிரண்டை வல்லமையும் நன்மைகளும் ஒருங்கே கொண்ட தாவரம். நம் அனைவருக்கும் இந்தத் தன்மைகள் வேண்டும் என்பதால் பிரண்டையின் பெயரால் ஒரு திருவிழாவை நடத்த விரும்புகிறோம்.
மரபுவழிப்பட்ட தொழில்களுக்கான அரங்குகள் இடம் பெறவுள்ளன. பெரும் நிறுவனங்களில் பணியாற்றும் பலர் செம்மை அமைப்பில் இணைந்து, தம் குடும்பத்துடன் மரபுத் தொழில்களில் ஈடுபடத் துவங்கியுள்ளனர். சிறந்த மென்பொறியாளர்கள், முறுக்கு, அதிரசம் செய்வதையும், சீர் தானியச் சத்து மாவு செய்து விற்பதையும் இத்திருவிழாவில் நீங்கள் காணலாம்.
தற்சார்பு நிலையை நோக்கிய வாழ்க்கைக்குள் வந்து கொண்டிருப்பவர்களுக்கான கூடலாக இத்திருவிழா அமைய உள்ளது.
பழங்குடி மக்களின் நடனங்களும் அவர்களிடம் பயிற்சி பெற்ற மாநகரக் குழந்தைகளின் நடனங்களும் இடம் பெற உள்ளன.
பிரண்டைத் திருவிழாவிற்கெனத் தனி முகநூல் பக்கம் துவங்கப்பட்டுள்ளது. இவ்விழாவிற்கென பல பொறுப்பாளர்கள், செயலாளர்கள் பணியாற்றத் துவங்கியிருக்கிறார்கள். இன்னும் பல தன்னார்வர்கள் இப்பணிக்குத் தேவைப்படுகிறார்கள். இப்பணியில் விருப்பமுள்ளோர் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.


