
தமிழக அரசின் தலைமைச்செயலர் வீட்டில் சோதனை நடந்ததை ஒட்டி பச்சைதமிழகம் நிறுவனர் சுப.உதயகுமாரன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…
மணல் கொள்ளையன் சேகர் ரெட்டியை கைது செய்திருப்பதையும், அந்த சமூக விரோதிக்கு துணை போன தலைமைச் செயலாளர் வீட்டில், அலுவலகங்களில் தேடுதல் வேட்டை நடத்தியிருப்பதையும் வரவேற்போம். மிக நீண்ட காலமாக தமிழர்களின் வளங்களும், வாழ்வாதாரங்களும் ஊழல் அரசியல்வாதிகளால், அவர்களுக்குத் துணை போகும் அதிகாரிகளால் திருடப்பட்டு வருகின்றன. இன்று பாரத ரத்னாவாக அறிவிக்கப்பட வேண்டும் என்பவரின் ஆட்சியில் ஊழலும், ஊதாரித்தனமும் தலைவிரித்தாடின. தேர்தலில்கூட ஊழல் செய்தார்கள். சட்டமன்றத்தையே திருடிக்கொண்டார்கள்.
யார் காலில் விழுந்தாவது, என்ன செய்தாவது அடுத்த நான்கரை ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும், கையில் கிடைப்பதை எல்லாம் சுருட்டிக் கொள்ளவேண்டும் என்பதில் கவனத்துடன் அணிதிரண்டு வருகின்றனர் ஆளும் கட்சியினர். இவர்களின் ஊழல்களை அம்பலப்படுத்துவதும், இந்த ஊழல் பேர்வழிகளை அப்புறப்படுத்துவதும் வரவேற்கப்பட வேண்டிய விடயங்கள்தான்.
ஆனால் இந்த ஊழல் நடவடிக்கைகள் யாரால், எப்போது, எப்படி, ஏன் நடத்தப்படுகின்றன என்பதை நாம் கவனத்திற்கொண்டாக வேண்டும். இந்த பா.ஜ.க. புனிதர்கள் ஊழலை விரட்டும் போர்வையில் நமது அடிப்படை அரசியல் உரிமைகளை அழித்தொழிக்கிறார்கள். “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியிலே கூட்டாட்சி” என்று குரல் கொடுத்த தி.மு.க.வே அவ்வப்போது அந்தக் கொள்கையில் சமரசம் செய்தாலும், தமிழர்கள்.இந்தக் கொள்கையை தொடர்ந்து ஆதரித்தே வருகின்றனர். “அனைத்திந்திய” கட்சியின் தலைவியான செல்வி ஜெயலலிதாகூட பெரும்பாலான வேளைகளில் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தே வந்திருக்கிறார். “தன்னாட்சி தமிழகம், இணையாட்சி இந்தியா” என்று பச்சைத் தமிழகம் கட்சி குரல் கொடுக்கிறது.
இந்நிலையில் தமிழக அரசின் அனுமதியில்லாமலேயே, மத்திய அரசின் துணை ராணுவப் படை தலைமைச் செயலாளர் வீட்டைக் காவல் காப்பதும், தலைமைச் செயலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தேடுதல் வேட்டை நடத்துவதும் எப்படி சரியாகும்? தமிழக ஆளுநர் தமிழக முதல்வரையோ, அரசையோ கலந்தாலோசிக்காமல் இந்த தேடுதல் வேட்டைகளுக்கு எப்படி அனுமதி கொடுத்தார்? இந்த அத்துமீறல் நடவடிக்கைகள் எட்டு கோடி தமிழர்களை அவமரியாதை செய்வதாகாதா?
வீட்டுக்குள் நுழைந்த திருடனைப் பிடிக்கிறோம் என்ற பெயரில் வீட்டிலிருந்த மனைவியை/கணவனை திருடிச் செல்வதை எப்படி அனுமதிக்க முடியும்? இந்தப் போக்கு இப்படியேத் தொடர்ந்தால், இனி என்னவெல்லாம் வரும்? எப்படியெல்லாம் நடக்கும்?
மாநில உரிமைகளை மதித்து, மாநில வருவாய்த் துறை, காவல்துறை போன்ற துறைகளை இணைத்துக்கொண்டு, முறைப்படி நேர்மையாக, உண்மையாக, மக்கள் நலனுக்காக நடத்தப்படும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆதரிப்போம். எங்களை மாறி மாறி ஆண்ட இரண்டு கழகங்களும் ஊழல் வயப்பட்டுவிட்டலும், தமிழர்களில் பெரும்பாலானோர் உண்மையானவர்கள்தான். தில்லிக்காரன் இந்திக்காரன் வந்துதான் எங்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்கிற அவல நிலையில் நாங்கள் இல்லை.
ஊழல் எதிர்ப்பு போர்வையில் மத்திய அரசு அத்துமீறி உள்ளே புகுந்து, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றால், நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். இந்த கொல்லைப்புற ஊடுருவலை உறுதியாகத் தடுப்போம். எந்தக் கொம்பன் வந்தாலும் தமிழ் மண்ணில் இந்தி தேசிய, பாசிச சக்திகளை காலூன்ற விடமாட்டோம் என் சூளுரைப்போம் தமிழர்களே!


