
கூட்டத்தின் முடிவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைபாளர் பெ.மணியரசன் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறினார்.
1. ஆடுதாண்டு காவிரி என்று அழைக்கபடும் மேகேதாட்டுப் பகுதியில் 48 ஆ.மி.க. கொள்ளவு கொண்ட இரு அணைகள் காவிரியின் குறுக்கே கட்டி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட வரமால் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உச்ச நீதிமன்றம், காவிரித் தீர்பாயம் ஆகிய நீதித்துறை தலைமை அமைப்புகளின் ஆணைகளைத் துச்சமாகத் தூக்கியெறிந்து தமிழர்களுக்கு எதிராக இனப் பகையோடு செயல்படும் கர்நாடக அரசின் இன்னொரு அட்டூழியம் தான் புதிய அணைகள் கட்டும் திட்டம். இரு அணைகளும் கட்டப்பட்டு விட்டால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூர் அணைக்கு உபரி வெள்ளமாக வராமல் கர்நாடக அரசால் தடுக்க முடியும். அதன் பிறகு தமிழ்நாட்டில் 24,00,000 ஏக்கர் சாகுபடி நிலம் பாலை நிலம் ஆவதுடன், காவிரியால் குடி நீர் பெறும் 20 மாவட்டங்களில் உள்ள பல கோடி மக்கள் குடி நீர் இன்றி பெரும் துயரத்துக்கு ஆளாவார்கள். எனவே தேர்ந்தேடுக்கப் பட்ட ஆயிரம் பேரை ஒகேநக்கலில் இருந்து பேரணியாக அழைத்துச் சென்று ஆடுதாண்டு காவிரியில் அணைக்கட்டும் இடத்தில் மறியல் போராட்டம் நடத்தி. மக்கள் விரோதத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவது என்று ஒரு மனதாகக் காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.
2. ஆடுதாண்டு காவிரியில் இரண்டு அணைகள் கட்டும் கர்நாடக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து 22.11.2014 அன்று திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் நடத்தவுள்ள முழு அடைப்பு, பொது வேலை நிறுத்தம், தொடர்வண்டி மறியல் போராட்டங்களுக்குக் காவிரி உரிமை மீட்புக் குழு முழு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
3. தமிழ் மக்களைத் தாக்க உள்ள பேராபத்தை உணர்ந்து கொண்டு அவசர நடவடிக்கையாக அனைத்துக் கட்சிக் குழுவினரை அழைத்துக் கொண்டு சென்று தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைப் பார்த்துப் பேசி புதிய அணைகள் கட்டும் திட்டத்திற்கு நடுவண் அரசின் சுற்றுச்சூழல் – வனத்துறையினரும் – நடுவண் அரசின் நீர்ப்பாசனத்துறையினரும், அனுமதியளிக்காமல் தடுத்திட வேண்டும் என்று கோரிக்கை விண்ணப்பம் கொடுத்து அழுத்தம் தரவேண்டும் என்று தமிழக முதல்வர் திரு ஓ. பன்னீர்ச்செல்வம் அவர்களை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.


