பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூரில் சமீபத்தில் மர்ம மனிதரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் குடும்பத்தினருடன் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு நல்ல நட்பு உண்டு. கவுரி சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த அவர்,
கவுரி கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி ஆழ்ந்த மவுனத்தைக் கடைபிடிக்கிறார். அவர் என்னை விட மிகச் சிறந்த நடிகராக உள்ளார். நடிப்புக்காக எனக்குக் கிடைத்த விருதுகளை எல்லாம் அவருக்குக் கொடுத்திருக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை விமர்சித்தார்.
பிரகாஷ்ராஜின் இந்த விமர்சனத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மோடியைத் தரக்குறைவாக விமர்சித்திருப்பதாகக் கூறி லக்னோ நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 7,2017 அன்று நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரகாஷ்ராஜ் கூறி இருப்பதாவது:-
நான் பிரதமர் மோடிக்கு எதிரானவன் என்கிறார்கள். பிரதமர் மோடி இந்த நாட்டின் பெரும்பாலான மக்களால் தேர்வான ஒரு தலைவர். இந்த நாட்டின் குடிமகன் மற்றும் நடிகர் என்ற முறையில் அவருக்கு மாறுபட எனக்கு உரிமை உள்ளது. அவர் ஒரு கட்சியைச் சார்ந்தவர் அல்ல. மதச்சார்பற்ற நாட்டின் பிரதிநிதியாக இருப்பவர். ஜனநாயக நாட்டில் அவர் கவுரி கொலை விவகாரத்தில் மவுனமாக இருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த நாட்டில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து நான் பாடம் கற்றுள்ளேன். எனவே எனக்கு எப்போது, எங்கே அவசியம் என்று தோன்றுகிறதோ அப்போது நான் தொடர்ந்து பேசுவேன். என் மனதில் பட்டதைத் துணிந்து சொல்வேன். எனது கருத்தை வெளியிட உரிமையும், சுதந்திரமும் உள்ளது. நான் இப்படிப் பேசுவதால் அரசியலுக்கு வரப்போவதாக சிலர் நினைக்கலாம். நான் அரசியலுக்கு வர விரும்பினால் நேரடியாக உங்களிடம் வந்து விடுவேன். எனது விருப்பத்தை உங்களிடம் வெளியிடுவேன். நான் உலக மனிதனாக வாழ விரும்புகிறேன். மனிதனாக செயல்படவே ஆசைப்படுகிறேன்
என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார். இதில் அவர் உலக மனிதனாக வாழ விரும்புகிறேன் என்று சொல்லியிருப்பதை வைத்துக்கொண்டு நடிகர் கமலை விமர்சனம் செய்கிறார் என்று சொல்கிறார்கள்.
உலகநாயகன் என்றழைக்கப்படும் கமல், தமிழக அரசை மட்டும் விமர்சனம் செய்கிறார், மோடி அரசைப் பற்றி எதுவும் சொல்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இந்நிலையில்,பேட்டியில், மனிதன் என்பதோடு நிறுத்தாமல் உலகமனிதன் என்று
பிரகாஷ்ராஜ் சொல்லியிருப்பதாலும் நேரடியாக மோடிக்கு எதிராகக் கருத்துச் சொல்வதாலும் பிரகாஷ்ராஜின் பேட்டி கமலை விமர்சனம் செய்வதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.