
சென்னை மதுரவாயல் அருகே உள்ள சின்ன நொளம்பூர், ஓம் சக்தி நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. குடியிருப்புகள் மற்றும் ரேஷன் கடைக்கு அருகில் இந்த மதுபான கடை இருப்பதால் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக உள்ளது.
எனவே உடனடியாக அந்த மதுக்கடையை மூட வேண்டும் என்று வலியுறுத்தி பாடகர் கோவனின் மக்கள் அதிகாரம் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினர். பின்னர் இதுபற்றி மதுரவாயல் வட்டாட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவை உயர் அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பி அதிகாரிகளிடம் கேட்டு முடிவு எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் சீனிவாசன் கூறினார்.
இதற்கிடையில் மே 5-ந் தேதிக்குள் மதுக்கடையை மூடாவிட்டால் நாங்களே அந்த மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் அறிவித்து இருந்தனர். இதுதொடர்பாக அந்த பகுதியில் சுவரொட்டிகளும் ஒட்டி இருந்தனர்.
இந்தநிலையில் மே 5 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் சின்னநொளம்பூரில் உள்ள மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மதியம் 12.30 மணியளவில் மதுரவாயல் ரேஷன் கடை பஸ் நிறுத்தம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த ஆண்கள், பெண்கள், இளம்பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தாரை தப்பட்டைகள் முழங்க ஊர்வலமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒன்று திரண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட வந்த பெண்கள் பலர் தங்களது கைக்குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகளுடன் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் தங்கள் கைகளில் கொடி மற்றும் அரசுக்கு எதிரான கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அங்கிருந்து ஊர்வலமாக வந்து மதுக்கடைக்கு செல்லும் வழியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதையடுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், வாலிபர்கள் உள்பட அனைவரையும் கை, கால்களை பிடித்து குண்டு கட்டாக தூக்கிச்சென்று வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளு முள்ளும் ஏற்பட்டது.
உடனே போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் போராட்டக்காரர்களை தர, தரவென சுடும் தரையில் அடித்து, இழுத்துச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அவர்களின் தலைமுடி மற்றும் துணியை பிடித்தபடி பெண் போலீசார் தர, தரவென இழுத்து சென்று வேனில் ஏற்றினார்கள்.
காவல்துறை தாக்கியதில் வயதான பெண் ஒருவர் உள்பட 5 பேருக்கு மண்டை உடைந்தது. வயதான பெண்மணிக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அதை சகபெண்கள் துணியை வைத்து அழுத்தி ரத்தம் வழிந்தோடுவதை தடுத்தனர். ஒரு சிறுவனுக்கு மயக்கம் ஏற்பட்டதால் அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கைக்குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


