பேச்சு வேண்டாம் செயலில் காட்டுங்கள் – விஜய்க்கு சசிகலா அறிவுரை

 

 

 

 

 

 

அஇபுதமமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில்…..

தமிழக சட்டமன்றம் இந்திய ஜனநாயக வரலாற்றில் நூற்றாண்டைக் கடந்த பாரம்பரியமும், சமூக மாற்றத்திற்கான பல முன்னோடி சட்டங்களை இயற்றிய பெருமையும் கொண்டது. ஆங்கிலேயேர்கள் ஆட்சிக்காலம் முதலே, தனித்து நின்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகத் திகழ்ந்தது நம் தமிழகம். அரசியல் சலசலப்புகள், ஆட்சிக் கலைப்புகள், குடியரசுத் தலைவர் ஆட்சி என எத்தனையோ சிக்கல்களைக் கடந்து, தமிழக சட்டமன்றம் கடந்து வந்த பாதைகள் கரடு முரடானதாக இருப்பினும், பல அறிய வியத்தகு சிறப்புகளை உள்ளடக்கியது.

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அதிலும், குறிப்பாக நம் இளைய சமுதாயத்தினர் பார்த்து கொண்டிருக்கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாக விளங்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நம் வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும். தற்போது சட்டமன்றத்தில் நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கும்பொழுது நம் இளம் சமுதாயத்தினர், நாமும் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என தவறுதலாக கருதிவிடக்கூடாது. தமிழக முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர், அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள் மற்றும் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தொடர்ந்து குறைசொல்லிக்கொண்டு இருப்பதால் தமிழக மக்களுக்கு எந்தவிதத்திலும் அது பயனளிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வர் இன்றைக்கு அனைத்து அதிகாரங்களையும் தனது கையில் வைத்து இருக்கிறார். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மீது வெறுமனே குற்றம் சாற்றுவதோடு இருந்துவிடாமல் அவர்கள் மீது உள்ள குற்றத்தை நிரூபித்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து செயலில் காட்டுவதுதான் சிறந்ததாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுளேன்.

தமிழக சட்டமன்றத்தில் திரு.சி.ராஜகோபாலாச்சாரி, திரு.ஓ.பி.ராமசாமி ரெட்டியார், கர்மவீரர் திரு.காமராஜர், திரு.C.N.அண்ணாதுரை, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா உள்ளிட்ட பல ஜாம்பவான்கள் முதல்வர்களாக பணியாற்றி இருக்கின்றனர். தமிழக மக்களுக்கு தேவையான வாழ்வாதார திட்டங்கள் பற்றியும், அவர்களின் உரிமைகள் பற்றியும், மாநிலத்தின் வளர்ச்சி பற்றியும் பல விவாதங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், தற்போது சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. தமிழகத்தில் மக்களுக்கு இன்றைக்கு இருக்கின்ற அத்தியாவசிய தேவைகளையும், மக்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும் விவாதிக்க வேண்டிய நேரத்தை, தனி மனித தாக்குதல்களுக்கும், ஒருவரை ஒருவர் குறை சொல்வதற்கும் அந்நேரத்தை செலவிடுவதால் தமிழக மக்களுக்கு எந்தவித பயனும் அளிக்காது. தமிழக மக்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள், தமிழக சட்டமன்றத்தில் நாம் தொன்றுதொட்டு கட்டிக்காத்த மரபுகளை, கடைபிடித்து வந்த விதிகளை, பாரம்பரியமிக்க மாண்பை காப்பாற்றும் விதமாக தங்களது செயல்பாடும் அமையவேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response