
2024 பாராளுமன்றத் தேர்தலின்போது தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலைக்கு அக்கட்சியில் கூடுதல் முக்கியத்துவம் இருந்தது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது அவருடைய தமிழ்நாடு தலைவர் பதவி பறிக்கப்பட்டதோடு கட்சியில் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை.சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் வழங்கப்படவில்லை.
இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் அண்ணாமலை,பாஜகவிலிருந்து விலகி தனிக்கட்சி தொடங்கவிருக்கிறார் என்று அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டிருந்தன.
அவருடைய ஆதரவாளர்கள், நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு அண்ணாமலை நற்பணி மன்றம் என்கிற அமைப்பை ஏற்படுத்தி அதற்குப் பொறுப்பாளர்கள் நியமித்து நடத்திவருகின்றனர்.
அண்மையில்,(மே 15,2026)சிபிஎஸ்இ,அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில்,இந்தக் கல்வியாண்டிலிருந்தே 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியைக் கட்டாயமாக்கியுள்ளது.இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை மீறியிருக்கிறது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,சிபிஎஸ்இயின் இந்த திடீர் அறிவிப்பு,பெற்றோர்களுக்கு,குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழகக் குழந்தைகள் ஏற்கனவே ஆறாம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ள நிலையில்,தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின்படி,ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளைக் கட்டாயமாக கற்கவேண்டும் என்றும்,அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்கவேண்டும் என்றும் சிபிஎஸ்இ தனது சமீபத்திய சுற்றறிக்கையில் கூறியுள்ளது.அதுவும் இது நடப்பு கல்வியாண்டு 2026 ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மிகவும் குறுகிய காலத்திற்குள் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றொரு புதியமொழியைக் கற்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது,குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி,அவர்களின் மொத்தக் கல்வித்திறனையும் பாதிக்கச் செய்யும்.எனவே இந்தப் புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு,2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மும்மொழித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புத் திட்டத்தை அண்ணாமலை வெளிப்படையாக எதிர்த்ததன் மூலம் அவர் தனிக்கட்சி தொடங்குகிறார் எனும் செய்தி வலிமை பெற்றது.
இந்நிலையில்,பாஜகவின் முன்னாள் கோவை மாநகர் தலைவர் உத்தம பாலாஜி ராமசாமி, தனது உத்தம் பவுண்டேஷன் அமைப்பு சார்பில் கோவை மாநகர் முழுவதும் அண்ணாமலையை வாழ்த்தி சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார். அதில்,எங்கள் தலைவா தலைமை ஏற்க வா,வையத் தலைமை கொள’என்கிற வாசகங்கள் அச்சிடப்பட்டு, அண்ணாமலையின் படங்களுடன் ஒட்டப்பட்டுள்ளது.
இதனால்,ஜூன் 4 ஆம் தேதி அவரது பிறந்தநாளை ஒட்டி புதியகட்சி தொடங்குகிறார் என்று சொல்லப்படுகிறது.அவருடைய ஆதரவாளர்கள் இத்தகவல் உண்மைதான் என்று சொல்கின்றனர்.


