
குற்றப்பரம்பரை’ கதையை படமாக்குவதில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாலா இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒரே கதையை படமாக்குவதாகக் கூறப்பட்டது. சமீபத்தில் பாரதிராஜா இந்த படத்துக்கான தொடக்க விழாவை நடத்தி முடித்தார்.
இந்த நிலையில், இயக்குநர் பாலா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
‘குற்றப்பரம்பரை’ பட விவகாரத்தில் நான் காயப்பட்டிருக்கிறேன். மக்களுக்கும், சினிமா துறையினருக்கும் தன்னிலை விளக்கமளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ‘குற்றப்பரம்பரை’ நாவல் வேல ராமமூர்த்தி என்பவரால் எழுதப்பட்டது. அதற்கு முன்பு ‘கூட்டாஞ்சோறு’ என்ற பெயரில் அந்தக் கதை வெளியாகியிருந்தது. என்னிடம் அந்த ‘கூட்டாஞ்சோறு’ கதையைப் படமாக்கும்படி கூறினார். நானும் அந்தக் கதையின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு கற்பனையாக மேலும் சில விவரங்களை சேர்த்து படமாக்கலாம் என்றேன். இதுதான் நடந்த உண்மை.
இந்த நிலையில், ரத்னகுமார் என்பவர் அவரது கதையை நான் படமாக்குவதாக பாரதிராஜாவின் முதுகுக்குப் பின்னால் நின்று கொண்டு அவதூறு பேசினார். ‘குற்றப்பரம்பரை’ என்பது கதையல்ல, வரலாறு. அந்த வரலாற்றை யார் வேண்டுமானாலும் படமாக்கலாம். பாரதிராஜா எனக்கு போன் செய்து அவர் எடுக்கும் ‘குற்றப்பரம்பரை’ கதையை படமாக்கக்கூடாது என்றார். நான் அவரிடத்தில் வேறு கதையை படமாக்குகிறேன் என்று விளக்கம் சொன்னேன். ‘குற்றப்பரம்பரை’ தலைப்பு வைக்கக்கூடாது என்றார். அதற்கும் சரி என்றேன். அதன்பிறகு, பாரதிராஜா, என்னை அநாகரிகமான வார்த்தைகளால் பேசி பேட்டி கொடுத்தார். எரிச்சல்பட்டேன்.
ரத்னகுமார் என்மீது வழக்குப்போடுவேன் என்கிறார். அவதூறாகவும் பேசுகிறார். பாரதிராஜாவின் ‘ஷூ’வை துடைத்து அவரிடம் உதவியாளராக பாலா வேலை செய்யலாம் என்கிறார். பாலுமகேந்திராவைத்தான் நான் குருஸ்தானத்தில் வைத்திருக்கிறேன். வேறு யாரிடமும் வேலை பார்க்க அவசியமில்லை.
பாரதிராஜா நடத்திய ‘குற்றப்பரம்பரை’ பட பூஜைக்கு செல்லத் தயாராகக் கூட இருந்தேன். ரத்னகுமார் என்னிடம் ‘பிதாமகன்’ படப்பிடிப்பின்போது நேரில் வந்து பாரதிராஜாவைப் பற்றி தரக்குறைவாக பேசினார். உங்களால்தான் ‘குற்றப்பரம்பரை’ கதையை படமாக்கமுடியும் என்றார். அப்படிப்பட்டவர், இப்போது என்னைப்பற்றி அவதூறாக பேசுகிறார்.
எதற்கெடுத்தாலும் நாங்கள்தான் மண்ணுக்கு சொந்தக்காரர்கள், எங்களுக்குத்தான் படம் எடுக்க உரிமை உண்டு என்று என்னை அவர்கள் குத்திக்கொண்டே இருக்கிறார் கள். இனி ஒரு தடவை பாரதிராஜாவோ, ரத்னகுமாரோ என்னைப்பற்றி வாய்திறந்தால், அது உங்களுக்கு நல்லது இல்லை என்று எச்சரிக்கிறேன். என்னிடம் நேர்மை இருக்கிறது. பாரதிராஜாவுக்கு மட்டும்தான் உணர்ச்சிவசப்பட்டு பேசமுடியும் என்பதில்லை. எங்களுக்கும் உணர்ச்சி இருக்கிறது.
நான் இயக்கும் படத்தின் படபூஜை இன்னும் இரண்டு, மூன்று மாதத்தில் நடைபெறும். இது பாரதிராஜா எடுக்கும் படத்தின் கதையல்ல. வேறு கதை என்பதை மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். இந்த படத்தில், விஷால், ஆர்யா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இவ்வாறு பாலா கூறினார்.


