புதிய கண்டுபிடிப்பு- இலண்டன்வாழ் தமிழருக்கு உயரிய விருது

அதிநவீன மின்னணு பாதுகாப்பு சாதனத்தை (பூட்டு சாவி) உருவாக்கியதற்காக, பிரிட்டனின் “பிசினஸ் லீடர்’ என்னும் உயரிய விருதை தமிழகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் நந்தகோபால் லட்சுமிநாராயணன் பெற்றுள்ளார்.

இலண்டனில் அண்மையில் நடைபெற்ற விழாவில், 2015-ஆம் ஆண்டுக்கான சிறந்த புதுமைக் கண்டுபிடிப்புக்கு வழங்கப்படும் “பிசினஸ் லீடர்’ விருதை அவர் பெற்றார். ஆனால், அதற்கான முறைப்படியான அறிவிப்பு, திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த நந்தகோபால் லட்சுமிநாராயணன், இந்தியாவிலும் பிறகு சிங்கப்பூரிலும் தனது பொறியியல் படிப்பை முடித்துள்ளார்.
இலண்டனில் உள்ள லிங்கன் செக்யூரிட்டி லிமிடெட் என்ற நிறுவனத்தில் தற்போது பணியாற்றி வரும் இவர், பிரிட்டன் அரசின் அறிவுசார் தகவல் பறிமாற்றக் கூட்டுத் திட்டத்தின் கீழ், லிங்கன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த அதிநவீன மின்னணுப் பாதுகாப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளார்.

இவர் உருவாக்கியுள்ள “இ-லாக்’ (eLOQ) எனப்படும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி, மின்னணு பூட்டு, சாவிகளை இயக்க முடியும். பேட்டரியின்றி இயங்கும் இந்த வகைப் பூட்டு சாவிகளை போலியாக தயாரிக்கவோ, நகலெடுக்கவோ முடியாது.

Leave a Response