கூடங்குளத்தில் அணுப்பேரிடர் தவிர்த்த போராளிகளுக்கு விருது தரவேண்டும் – சுப.உதயகுமார் கோரிக்கை

கூடங்குளத்தில் பெரும் விபத்தை தவிர்த்த காரணத்தால், போராடும் மக்களுக்கு விருதும், இழப்பீடும் வழங்க வேண்டுமென்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பொய் வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், ஆபத்தான கூடங்குளம் திட்டத்தை கைவிடக் கோரியும் எதிர்வரும் 2016 சனவரி 4-ஆம் நாள் தொடர்வண்டிப் பிரச்சாரப் பயணம் ஒன்றை நடத்தவிருப்பதாகவும், சனவரி 5, 6, 7 ஆகிய நாட்களில் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள் அனைவரையும் சென்னையிலே சந்தித்து ஆதரவு கோரவிருப்பதாகவும் இயக்கம் அறிவித்துள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் பெரும் அவலத்துக்குள்ளாகி இருக்கும் செய்தி தமிழக முதல்வரின் கவனத்துக்கேச் சென்றுவிட்டது. கடந்த யூன் 24 அன்று மூடப்பட்ட உலை இன்று வரை இயங்கவில்லை. அதேபோல 2014-ஆம் ஆண்டு மின் உற்பத்தியைத் துவங்கும் என்று சொல்லப்பட்ட கூடங்குளம் இரண்டாவது அணுஉலை 2017-ஆம் ஆண்டுதான் இயங்கும் என்றும் சொல்கிறார்கள். இந்தக் குழப்பங்களுக்கும், குளறுபடிகளுக்கும் காரணம் கூடங்குளத்தில் தரமற்ற உபகரணங்களையும், உதிரிப் பாகங்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்; அங்கே மக்களுக்கு பேராபத்தைத் தரும் பல கோளாறுகள் இருக்கின்றன; சில காங்கிரசுப் பிரமுகர்களும், அணுசக்தித் துறை அதிகாரிகளும் பெரும் ஊழல்களில், மோசடிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் நாங்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறோம்.

கடந்த 2013-ஆம் ஆண்டு கூடங்குளம் திட்டத்தின் முதல் உலையில் யுரேனிய எரிகோல்கள் ஏற்றிய தொழிலாளரான, ராதாபுரம் நெடுவாழிப் பகுதியைச் சார்ந்த திரு. பெருமாள் மகன் திரு. சரவணன் (வயது 42) தீவிர சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 14 அன்று பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைத்து இறந்திருக்கிறார். அவரது அடக்கம் டிசம்பர் 15 அன்று ராதாபுரத்தில் நடந்திருக்கிறது. திரு. சரவணன் மனைவி திருமதி. கெளரியும், குழந்தையும் நிர்க்கதியாக நிற்கின்றனர்.

தரமற்ற தோல்விகரமான கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இடிந்தகரை, கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் போராட்டம் நடத்தவில்லையென்றால், மக்கள் விரோத காங்கிரசு அரசாங்கமும், பொறுப்பற்ற இந்திய அணுசக்தித் துறை அதிகாரிகளும், பெருத்த லாபம் ஒன்றை மட்டுமே கணக்கிற்கொண்டு இயங்கும் ரஷ்ய அரசுமாக சேர்ந்து கூடங்குளம் அணுஉலைகளை ஓட்டியிருப்பார்கள். லட்சோப லட்சம் தமிழர்களும், மலையாளிகளும் பெரும் ஆபத்துக்கு ஆளாகியிருப்பார்கள். இந்த மாபெரும் அணுப் பேரிடரை தடுத்து நிறுத்திய கூடங்குளம் போராளி மக்களுக்கு உரிய விருதும், போதிய இழப்பீடும் மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை சீர்தூக்கிப் பார்க்காமலே உடனடியாக நிராகரிக்கும் தில்லி ஆட்சிபீடம் இந்த கோரிக்கையையும் நிராகரித்தால், தமிழக அரசாவது போராடிக் காத்த மக்களை உரிய வகையில் கெளரவிக்க வேண்டும், அவர்களின் இழப்புக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

குறைந்தபட்சம் போராளிகள் மீது போடப்பட்டிருக்கும் 140 பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கூடங்குளம் முதலிரண்டு உலைகளை உடனடியாக மூட வேண்டும். பயனற்ற ரஷ்ய உலைகளை மீண்டும் வாங்கி கூடங்குளத்திலோ, வேறு எங்குமோ நிறுவக் கூடாது என்று கோரிக்கைகள் வைக்கிறோம்.

எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 2016 சனவரி 4-ஆம் நாள் தொடர்வண்டிப் பிரச்சாரப் பயணம் ஒன்றை நடத்தவிருக்கிறோம். சனவரி 5, 6, 7 ஆகிய நாட்களில் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள், பத்திரிக்கை ஆசிரியர்கள் அனைவரையும் சென்னையிலே சந்தித்து ஆதரவு கோரவிருக்கிறோம். அடுத்த கட்டப் போராட்டம் பற்றிய அறிவிப்பை அந்த நேரத்தில் வெளியிடுவோம்.

சுப. உதயகுமாரன்

ஒருங்கிணைப்பாளர்
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
9865683735

Leave a Response