கொழும்பு சிறைகளில் இருக்கும் தமிழர்களை விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்- கருணாநிதி

 

தி.மு.க. தலைவர் கருணாநிதி, பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

நீண்ட காலமாக இலங்கைச் சிறைகளில் வாடி வதங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களை விடுதலை செய்வது சம்பந்தமாக இலங்கை அரசு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியை மீறி நடந்து கொண்டிருக்கிறது.

2010-ம் ஆண்டு இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா, சிறைகளில் இருக்கும் அனைத்துத் தமிழர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக வழங்கினார்.

2015-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலின்போது, தமிழர்கள் மைத்ரிபால சிறிசேனாவுக்கு பெருவாரியாக வாக்களித்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது சிறிசேனா அதிபராகப் பதவியேற்றதும் சிறைகளில் இருக்கும் தமிழர்கள் அனைவரையும் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதிபர் தேர்தலில் சிறிசேனாவுக்கு 73 சதவீத வாக்குகளையும், ராஜபக்சேவுக்கு 25 சதவீத வாக்குகளையும் தமிழர்கள் அளித்தனர்.

சிங்களர்கள் பெருவாரியாக வாழும் பகுதிகளில் ஏராளமான வாக்குகளைப் பெற்று ராஜபக்சே முன்னணியில் இருந்தார். இலங்கையில் சிங்களர் அல்லாதார் வாக்குகளின் எண்ணிக்கை 9 லட்சமாகும். தமிழர்கள் பெருவாரியாக மைத்ரி பால சிறிசேனாவுக்கு வாக்களிக்காமல் போயிருந்தால், ராஜபக்சே எளிதில் வெற்றி பெற்றிருப்பார்.

தமிழ் தேசியக் கூட்டணியின் தலைவர் சம்பந்தனிடம் தமிழர்களுக்கு தாம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றப் போவதாக சிறிசேனா சொன்னதை நம்பி, தமிழர்கள் மைத்ரி பால சிறிசேனாவுக்கு வாக்களித்ததின் காரணமாகவே அதிபர் தேர்தலில் அவரால் வெற்றி பெற முடிந்தது. சிறிசேனா வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்று, இலங்கை சிறைகளில் நீண்ட காலமாக வாடிக்கொண்டிருக்கும் தமிழர்களை விடுதலை செய்வது தொடர்பானதாகும்.

12-11-2015 அன்று முதல்-மந்திரி விக்னேஸ்வரன், அதிபர் சிறிசேனாவைச் சந்தித்து, அவர் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதியையும், மீண்டும் அந்த வாக்குறுதியை நினைவுபடுத்தியதையும் எடுத்துச் சொல்லி, அந்த வாக்குறுதியின்படி தமிழர்களை பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதிபர் சிறிசேனாவைச் சந்தித்ததற்குப் பிறகு முதல்-மந்திரி விக்னேஸ்வரன், சிறையில் இருக்கும் தமிழர்களை சிங்களர்களின் எதிர்ப்பின் காரணமாக விடுதலை செய்ய முடியவில்லை என்று அதிபர் விளக்கியதாகத் தெரிவித்தார்.

தமிழர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களைத் தொடங்கி விட்டனர். நவம்பர் 13 அன்று தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து முழு வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கின்றன. தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிங்களர்கள் காப்பாற்றாததன் காரணமாக தமிழர்கள் வன்முறையற்ற போராட்டப் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

சிங்களர்கள் தங்களுடைய வாக்குறுதிகளை மீறி நடந்து கொள்ளும் போதெல்லாம் மத்திய அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகிறது.

இந்திய அரசு, இப்போதாவது தலையிட்டு, தமிழர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளையும், ஒப்பந்தங்களையும் நிறைவேற்றுவதற்கான அவசரத் தேவையினை இலங்கை அரசுக்கு உணர்த்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். சேன நாயகா காலத்தில் இருந்து தற்போது சிறிசேனா காலம் வரை, தமிழ் மக்களுடைய ஆதரவினை சிங்களர்கள் தங்களுடைய சுய நலத்திற்கே பயன்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அரசியல் நிலை மோசமாகி வருவதைக் கணக்கில் கொண்டு, கவலையோடும், உரிய வேகத்தோடும் இந்திய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழர்களுக்கு ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் முதல் கட்டமாக, இலங்கைச் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் தமிழர்களை உடனடியாக பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளில் இனியும் இந்திய மத்திய அரசு செயலற்று இருக்குமானால், வரலாறு மறக்காது; மன்னிக்காது என்பதை எச்சரிக்கையாகக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கருணாநிதி கூறியுள்ளார்.

Leave a Response