
கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை மோசமடைந்துவருவதையறிந்து அவர்களை நேரில் பார்வையிடுவதற்காக நவம்பர் 16 காலை அவசரமாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்து நண்பகலளவில் மகஸின் சிறைச்சாலைக்குச் சென்ற முதலமைச்சர் உண்ணாவிரதிகளைச் சந்தித்து உரையாடினார்.
“உங்களுடைய விடுதலைக்காக வடக்கு கிழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை முழு அளவிலான ஹர்த்தால் போராட்டம் ஒன்றை நாம் நடத்தினோம். உங்களுடைய விடுதலைக்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளோம் என்பதை இதன் மூலமாக வெளிப்படுத்தியிருக்கின்றோம். இது ஆரம்பம். எமது இந்தப் போராட்டம் தொடரும்.
உங்களுக்கு உங்கள் விடுதலை குறித்து திட்டவட்டமான உறுதிமொழி ஒன்றை என்னால் சொல்லமுடியாது. ஆனால், இதனையிட்டு அழுத்தம் கொடுக்கும் வகையில் செயற்பட முடியும். உங்களுடைய நிலை தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு நாள் தெரியப்படுத்தியுள்ளேன். அதனால், இந்தப் பிரச்சினை தொடர்பாக அவர்களும் அக்கறை காட்டுகின்றார்கள்.
உங்களுடைய நிலை மிகவும் மோசமடைந்துவருவதை அறிந்துதான் நான் இன்று இங்கு வந்தேன். உண்ணாவிரதத்தைக் கைவிடுங்கள் என்று நான் உங்களைக் கோரவில்லை. ஆனால், உங்களுடைய உடல்நிலை மோசமடைந்துவருவதால், உங்களுக்காக நாம் சிறைக்கு வெளியே போராடுவோம் என்ற உறுதியை நான் வழங்குகின்றேன். அதற்கு ஒரு சந்தர்ப்பத்தைத் தாருங்கள் என்றுதான் நான் கேட்கின்றேன். உங்களில் யாராவது மரணமடைந்தால் அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்காது.
ஜனாதிபதியுடன் உங்களுடைய பிரச்சினை குறித்து நான் பேசியுள்ளேன். இன்று அவர் பதிலளிப்பதாக உறுதியளித்துள்ளார். இதுவரையில் அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. இன்று மாலை அது குறித்து தெரியவரும். எப்படியிருந்தாலும், உங்களுடைய விடுதலைக்காக உங்களுக்காக சிறைக்கு வெளியே நாம் போராடுவோம்” என முதலமைச்சர் உணர்வுபூர்வமாக இங்கு உரையாற்றினார்.
முதலமைச்சருடன் சட்டத்தரணி இரத்தினவேல் உட்பட மற்றும் சிலரும் சென்றிருந்தார்கள். உண்ணாவிரதக் கைதிகளின் நிலையையும் பார்வையிட்ட முதலமைச்சர், கைதிகளின் விவகாரம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளுடனும் உரையாடினார்.


