தமிழகத்தில் கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கொடுப்பதா? -த.தே.பேரியக்கம் ஆர்ப்பாட்டம்

சேலம் தொடர்வண்டி கோட்டத்தில், “டி“ பிரிவு ஊழியர் வேலைக்கு தேர்வு நடத்தி அதில், 644 பேருக்கு வேலை தர நேர்காணலுக்கு அழைத்துள்ளார்கள். இந்த 644 பேரில், 401 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். 60 பேர் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இராஜஸ்தான் – 38, பீகார் – 16 மற்றும் சில வடமாநிலங்கள் என்று வேலை வழங்கிட அழைப்புக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

சேலம் தொடர்வண்டிக் கோட்டத்தில், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், விருத்தாச்சலம், தருமபுரி இடையே உள்ள இருப்புப் பாதைப் பகுதிகள் வருகின்றன. ஆனால், கேரளாவுக்கு மட்டும் 63 விழுக்காடு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து தொடர்வண்டித் துறையில் தமிழ்நாட்டில் உருவாகும் பணியிடங்களுக்கு, மிக அதிக எண்ணிக்கையில் கேரளாவைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்குவதும், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்குவதும் வழக்கமாக உள்ளது. மண்ணின் மக்களாகிய தமிழர்கள் தொடர்வண்டித் துறையில் இன ஒதுக்கல் கொள்கையால் பாதிக்கப்படுகிறார்கள்.

ஏற்கெனவே, சென்னை இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையிலும், மற்றும் தென்னகத் தொடர்வண்டி மண்டலத்திலும், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, வடமாநிலத்தவருக்கும், மலையாளிகளுக்கு மட்டுமே கூடுதலாக வேலை வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் செயல்படும் தொடர்வண்டித்துறை உள்ளிட்ட இந்திய அரசுத் தொழிலகங்கள் மற்றம் அலுவலகங்களில், 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும். அதுதான், மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்டதற்கான நீதியாகும். தமிழ்நாட்டிலேயே தமிழர்களைப் புறக்கணிக்கும் இந்திய அரசு நிறுவனங்கள், மற்ற மாநிலங்களில் எந்தளவுக்கு தமிழர்களைப் புறக்கணிப்பர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

தொடர்வண்டித்துறையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பினர் பயன் அடையாமல் வெளி மாநிலத்தவருக்குக் கொடுப்பது, சமூக அநீதியாகும்.

சேலம் தொடர்வண்டிக் கோட்டத்தில் வேலை வழங்கும் நேர்காணல்களுக்கு இப்பொழுது அழைத்துள்ள பட்டியலை முற்றிலுமாக இரத்து செய்துவிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 90 விழுக்காடு வேலை வாய்ப்ப்பு வழங்கும் வகையில, புதிய பட்டியல் தயாரித்து நேர்காணல் நடத்த வேண்டுமென்று வலியுறுத்தியும், தொடர்வண்டித்துறை கடைபிடிக்கும் தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் கொள்கையைக் கண்டித்தும், வருகின்ற 05.11.2015 வியாழன் காலை 10 மணிக்கு, சேலம் சந்திப்பு முன், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து தலைமையேற்கிறார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை, பொதுக்குழு உறுப்பினர் தோழர் ச. பிந்துசாரன் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர். தோழர் க. சேகர் நன்றியுரையாற்றுகிறார்.

இவ் ஆர்ப்பாட்டத்தில், தமிழின உணர்வாளர்கள் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

 

Leave a Response