
இந்திய-இலங்கை கடற்படை கூட்டுப் பயிற்சி, இலங்கையில் உள்ள திரிகோணமலையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து இந்தியக் கடற்படை, தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அண்டை நாடான இலங்கையுடனான உறவுக்கு வலுவூட்டும் வகையில், இரு நாடுகளுக்கிடையிலான 4ஆவது ஆண்டு கடற்படைக் கூட்டுப் பயிற்சி, இலங்கையின் திரிகோணமலையில் 27ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் நவம்பர் மாதம் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கடற்படைக் கூட்டுப் பயிற்சியின் பலனாக, இரு நாட்டுக் கடற்படைகளுக்கிடையே மேம்படுத்தப்பட்ட, உறுதியான ஒத்துழைப்பு இன்று காணப்படுகிறது.
கடல்பகுதியில் இரண்டு நாடுகளின் கடற்படைகளும் இணைந்து பணியாற்றும் திறன் மேலும் அதிகரிப்பதற்கும், பிராந்தியத்தின் கடலோரப் பாதுகாப்புக்கும் இந்தக் கூட்டுப் பயிற்சி மேலும் வலுவூட்டும் என்று நம்புகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்தப் பயிற்சியில், போர் விமானப் பயிற்சிகள், கடல்கொள்ளைத் தடுப்பு உள்பட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்.
நன்றி- தினமணி


