
சிங்கப்பூரில் வேலை செய்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த ஈஸ்வரி செல்லையா என்ற 47 வயது பெண், ஆசிய பெண்கள் நல சங்கத்தின் சார்பில் இந்த ஆண்டுக்கான முன்மாதிரி பணிப்பெண் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது 12 வயதில் தந்தையை இழந்தார். 14 வயதில் சென்னையில் அன்னை தெரசாவின் அமைப்பில் இணைந்து செயல்பட்டார்.
1986–ம் ஆண்டு, ‘சுவாமி ஹோம்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பின் ஏற்பாட்டில் சிங்கப்பூருக்கு சென்றார்.
அங்கு பக்கவாதம் தாக்கிய கலைச்செல்வி (53) என்பவருடைய வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு சேர்ந்தார். 76 கிலோ எடை உடைய கலைச்செல்வியை படுக்கையில் இருந்து தூக்கி சக்கர நாற்காலியில் அமர வைப்பது, கழிவறைக்கு செல்ல உதவுவது என எல்லா வகையிலும் இவர் உதவி வருகிறார்.
இதற்காக அவர் மாதம் 400 டாலர் சம்பளம் (சுமார் ரூ.18 ஆயிரம்) பெற்றாலும், மிகுந்த கரிசனையுடனும், மனித நேயத்துடனும் நடந்து கொள்கிறார். இது அனைவரையும் கவர்வதாக அமைந்துள்ளது.
மற்ற பணிப்பெண்களுக்கு இவர் நல்லதொரு முன்மாதிரியாக திகழ்கிறார் என்பதற்காகத்தான் ஆசிய பெண்கள் நல சங்கத்தின் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் 5 ஆண்டுக்கு பிறகு இப்போது தமிழ்நாட்டுக்கு வருகிறார். தனது இளைய சகோதர, சகோதரிகளை சந்திப்பதற்காகவும், இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை பார்த்து செல்வதற்காகவும் வருகிறார்.
தனது தன்னலமற்ற பணிபற்றி இவர் கூறும்போது, ‘‘நான் எப்போதுமே மற்றவர்களுக்கு உதவுவதை விரும்புகிறேன். மற்றவர்கள் சிறப்பாக வாழ்வதற்கு நான் உதவியாக இருக்கிறேன் என்று உணர்கிறபோது, அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது’’ என்கிறார்.


