
இராமநாதபுரத்தில் கலாம் புத்தகத் திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கி ராஜா மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த புத்தகத் திருவிழாவில் புதிதாக இந்த முறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின்பேரில் தனியாக அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அரங்கில் வெடிபொருட்கள் கண்டறியும் பிரிவு, வயர்லெஸ் கருவி போன்றவை செயல்படும் விதம் குறித்தும் செயல்விளக்கம் காட்டப்படுகிறது. இதுதவிர, காவல்துறையினர் அன்று முதல் இன்று வரை பயன்படுத்தி வரும் பாதுகாப்பு ஆயுதங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதில், ஏ.கே.47, 303 ரைபிள், இன்சாஸ் மற்றும் எஸ்.எல்.ஆர் துப்பாக்கிகள், கார்பின் துப்பாக்கிகள், ரிவால்வர், பிஸ்டல் போன்றவைகளும், கேஸ் கன், கண்ணீர் புகை போன்றவைகளும் வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் துப்பாக்கிகள் குறித்து மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்படுகிறது.
இதுதவிர, இந்த அரங்கில், ஹலோ போலீஸ், தெரியுமா உங்கள் போலீஸ், கிராம நல்லுறவு போலீஸ் குறித்தும் விளக்கி கூறப்படுகிறது. காணாமல் போனவர்கள் குறித்து எவ்வாறு புகார் செய்வது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தல், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்து புகார் செய்தல், ஈவ் டீசிங் குறித்து தகவல் தெரிவித்தல், கள்ள நோட்டுகளைக் கண்டறிதல் குறித்து உதவி ஆய்வாளர்கள் கார்மேகம், வேதவள்ளி உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர்.
இந்த அரங்கில், காவல்துறையில் எவ்வாறு சேருவது, அதற்கான தகுதிகள் என்ன என்பது குறித்து தெளிவாக விளக்கி கூறி சீருடைப் பணியில் சேர ஆர்வம் ஏற்படுத்தப்படுகிறது.
மாணவ- மாணவிகளுக்கு போக்குவரத்து விதிகள் குறித்தும், காவல் நிலையங்கள் குறித்தும், விபத்துகள் குறித்தும் 10 கேள்விகளும், அதற்கான பதிலை தேர்ந்தெடுக்க 3 விடைகளும் வழங்கப்பட்டு துண்டு பிரசுரம் வழங்கப்படுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்து அதில் முகவரி எழுதி அங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட வேண்டும். புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளில், விடைத்தாள்கள் திருத்தப்பட்டு சரியான பதிலை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.
காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு அரங்கினையும், அதில் உள்ள ஆயுதங்களையும் நேரில் பார்த்த மாணவ- மாணவிகள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


