அணுத்தீமை குறித்துப் பேசாதது ஏன்? ஜெ வுக்கு சுப.உதயகுமார் கேள்வி.

 

தமிழக மக்கள் எதிர்கொள்ளும் கூடங்குளம் அணுத்தீமைக் குறித்து மெளனம் சாதிப்பது ஏன் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர்  எழுதியுள்ள கடிதத்தில், “மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு, வணக்கம். ஆர். கே. நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துகளை வரவேற்கவும், அணுத்தீமையற்ற தமிழகம் படைக்க தங்களின் உதவியை இன்னுமொரு முறை நாடுவதற்குமாக இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.

மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாத அளவுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் 4,992 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்திருப்பதையும், அதன் காரணத்தால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகியிருப்பதையும் ஆர். கே. நகர் வாக்காளர்களிடம் பெருமையுடன் தாங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இந்த சாதனைக்காக தங்களைப் பெரிதும் பாராட்டுகிறோம். முடங்கிக் கிடக்கும் அல்லது முனகிக் கொண்டிருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலிரண்டு அலகுகளும், கல்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் அதிவேக ஈனுலைகளும் இந்த சாதனையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்யவில்லை என்பதை தாங்களும், தமிழக மக்களும் நன்கறிவோம்.

“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற அடிப்படையில் எப்போதும் செயலாற்றி வருவதாகக் கூறி, “உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில் உங்களுக்காக எப்போதும்போல பாடுபடுவேன்” என்றும் உறுதியளிக்கும் தாங்கள் தமிழக மக்கள் எதிர்கொள்ளும் மாபெரும் அணுத்தீமையைக் குறித்து மெளனம் சாதிப்பது ஏன் என்று புரியவில்லை. அதேபோல நூற்றுக்கணக்கான பொய் வழக்குகளை அமைதியாகப் போராடும் மக்கள் மீது திணித்து, உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்ட பிறகும் அவற்றைத் திரும்பப் பெறாது எங்களை வழக்கு, வாய்தா என்று அலைக்கழிப்பதும் ஏன் என்று தெரியவில்லை.

கூடங்குளம் எதிர்ப்புப் போராட்டத்தின் துவக்கத்தில் “உங்களில் ஒருத்தியாக இருப்பேன்” என்று மக்களுக்கு உறுதியளித்த தாங்கள் மீண்டும் அந்நிலைப்பாட்டை கைக்கொண்டு, தமிழக மக்களுக்காகப் பாடுபடுமாறு மீண்டுமொருமுறை விண்ணப்பித்துக் கொள்கிறோம். கூடங்குளத்தில் இன்னும் அதிகமாக நான்கு அணுஉலைகளையும், கல்பாக்கத்தில் உலகில் எங்குமே கட்டப்படாத அதிவேக ஈனுலைகளையும் கட்ட வேண்டாம் என்று மத்திய அரசிடம் தாங்கள் கோரிக்கை வைக்க தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளையும் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

Leave a Response