
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டம் தொடர்பாக 95 வாலிபர்களை சட்டவிரோதக் காவலில் வைத்து காவல்துறையினர் சித்ரவதை செய்தது தெரிய வந்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, 126 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், பலர் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது.
இதுதொடர்பாக சந்திரசேகர் என்ற வழக்குரைஞர், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாளிடம் ஒரு மனு கொடுத்தார். சட்டவிரோதக் காவல் பற்றி விசாரணை நடத்தி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதை ஏற்று, வல்லநாடு துப்பாக்கி பயிற்சி சரகத்தில், சட்டவிரோதக் காவலில் யாராவது வைக்கப்பட்டுள்ளார்களா? என்று நேரில் போய் விசாரிக்குமாறு விளாத்திகுளம் மாஜிஸ்திரேட்டு காளிமுத்துவேலுக்கு மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாள் உத்தரவிட்டார்.
அதன்படி, மாஜிஸ்திரேட்டு காளிமுத்துவேல், நேரில் சென்று பார்த்தார். அங்கு 95 வாலிபர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்கிருந்த காவல்துறையினரிடம் விசாரித்தபோது, அனைவரும் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு இருப்பதை உணர்ந்து கொண்டார்.
அதனால், அந்த வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்புங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டார்.இதனால், வேறு வழியின்றி, 65 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விட்டு, மீதி 30 பேரை விடுவித்தனர்.
வழக்கு போடப்பட்ட 65 பேரும் மாஜிஸ்திரேட்டு அண்ணாமலை முன்பு நிறுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப அண்ணாமலை உத்தரவிட்டார்.
இதற்கிடையே, 65 பேரின் பிணை மனுக்களையும் இரவு முழுவதும் அமர்ந்து விசாரிக்குமாறு மாவட்ட நீதிபதி சாருஹாசினிக்கு மதுரை உயர்நீதிமன்றப் பதிவாளர் உத்தரவிட்டார்.
அதை ஏற்று, பிணை மனுக்களை விசாரித்து 65 பேரையும் நீதிபதி சாருஹாசினி விடுதலை செய்தார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட 65 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பலர் இரத்தக்காயத்துடன் காணப்பட்டனர். தாங்க முடியாத வலியுடனும், காயங்களுடனும் நடந்து சென்றனர். சட்டவிரோதக் காவலில் அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
மேலும், இந்த சித்ரவதை பற்றி மாஜிஸ்திரேட்டு அண்ணாமலையிடம் அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இது, மனித உரிமை ஆணைய விசாரணையின்போது,காவல்துறையினருக்குப் பாதகமாக அமையும்.
