
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தால் ஐ.நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என டிசம்பர் 3 ஆம் நாளை அனுசரிக்கின்றது.
1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள், உலக நாடுகளால் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என கொண்டாடப்படுகின்றது.
உலகின் பல நாடுகளிலும் பல்வேறு மட்டத்தில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. பொதுவாக தன்னார்வலர்களினாலேயே இந்நாளில் பல முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. பல நாடுகள் அரசு நிறுவனங்கள், மற்றும் அரசு சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளின் நிலையை உயர்த்துவதற்கான செயல் திட்டங்களைத் தீட்டி, அவர்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிகின்றன.
அத்துடன், சமுதாயத்தில் அவர்கள் நிலை உயர சிறப்புக் கருத்தரங்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள், பிரசாரங்கள், ஊடகங்கள் வழியாக விழிப்புணர்வு விளம்பரங்கள் ஆகியவற்றின் வாயிலாக சமூகத்தில் சம உரிமைகளுடன் ஒவ்வொரு துறையிலும் மாற்றுத்திறனாளிகள் சிறந்து விளங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னையில், இந்நாளையொட்டி செளம்யாசிம்மன் அவர்களால் நடத்தப்படும் சுக்ரிதி சோஷியல் பவுண்டேஷன்,14 வருடங்களாக மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் நிறைய உழைப்பைச் செலுத்திக்கொண்டிருக்கிறது.
சிறுவயதில் வந்த காய்ச்சல் செளம்யாசிம்மனின் கால்களைக் காவுகொள்ளும் என்பது யாரும் எதிர்பாராதது.அதன் விளைவு, இன்றுவரை அவர் சக்கரநாற்காலியால் நடக்கவேண்டியதாகிற்று.
தன் நிலை இனி வேறு யாருக்கும் வந்துவிடக்கூடாது என்கிற எண்ணத்தில், ஓர் அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றி அதில் வருகிற சம்பளத்தை மூலதனமாகக் கொண்டும் நண்பர்கள் உதவியுடனும் இந்த அறக்கட்டளையை நடத்திவருகிறார்.
இதுவரை சிறு சிறு கூட்டங்கள், தனி நபர்கள் சந்திப்பு ஆகியனவற்றின் மூலம் சுமார் 10000 பேருக்கு மேலானோருடன் உரையாடல் நிகழ்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் செளம்யா.
குழந்தைகள் நடக்கத் தொடங்கும் பருவத்திலேயே அவர்களுக்கு நடப்பதில் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டால், சில ஆண்டுகளில் அக்குறையைக் களைந்து அவர்களை இயல்பாக நடக்கவைத்துவிடலாம். இதை அறிந்ததிலிருந்து எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்று அங்கு இந்தக்குறைபாட்டுடன் வருகிற குழந்தைகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு, அவர்கள் கால் அளவுக்கு செயற்கைக்கால் உறைகளை உருவாக்கி அணிவிக்கிறார்.
இரண்டு வயதில் குறைபாட்டைக் கண்டுபிடித்து இதைச் செய்துவிட்டால் எட்டு அல்லது பத்து வயதுக்குள் அவர்கள் இயல்பாக நடக்கத்தொடங்கிவிடுவார்கள். இதுவரை இவருடைய உதவியால் 2500 க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றிருக்கிறார்கள்.
இவர்கள் மட்டுமின்றி விபத்துகளில் கால்களை இழக்க நேரிடுவோர் கால்கள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்கிற மனநிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.அவர்களைத் தேற்றுவதோடு நம்பிக்கையையே கால்களாகக் கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனநிலையை அவர்களிடத்தில் உருவாக்குவதிலும் முன்னிற்கிறார் செளம்யா.
நாங்கள் மனதளவில் முழுமையானவர்கள்தாம் என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் எங்கள் உடலை மட்டுமே பார்த்து எங்களை எடைபோடுவதை விட்டுவிடுங்கள். மூளை உழைப்பில் எல்லோருக்கும் இணையாக நாங்களும் பணியாற்றுவோம் என்பதைக் கணக்கில் கொள்ளுங்கள், உங்களிடமிருந்து நாங்கள் எதிர்பார்ப்பது அனுதாபத்தையன்று எங்கள் திறமை மற்றும் உழைப்புக்கான அங்கீகாரத்தை மட்டுமே என்கிறார் கம்பீரமாய்ச் சொல்கிறார் செளம்யாசிம்மன்.
இவ்வாண்டு மாற்றுத்திறனாளிகள் நாளை முன்னிட்டு டிசம்பர் 2 ஆம் நாள் சென்னை அண்ணாசாலையிலுள்ள ராணிசீதை அரங்கில் சுக்ரிதி பவுண்டேஷன் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நாள் கொண்டாட்டம் நடைபெறவிருக்கிறது.
மாலை ஆறு மணிக்குத் தொடங்கவிருக்கும் இந்நிகழ்வை மாலாமணியன் அவர்களின் ஃபர்ஸ்ட்காபி புரொடக்ஷன்ஸ் ஒருங்கிணைத்து வழங்குகிறது.
நிகழ்வின்போது, மங்கையர்மலர் பத்திரிகையில் மாற்றுத்திறனாளிகளைக் கதை மாந்தர்களாகக் கொண்டு நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் தேர்வான 4 சிறுகதைகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. இப்பரிசை மங்கையர்மலர் பத்திரிகையே வழங்குகிறது.
ராஜ் தொலைக்காட்சி மற்றும் தினமலர் நாளேடு ஆகியோர் இந்நிகழ்வுக்கு தங்களின் ஆதரவையும் பங்களிப்பையும் வழங்குகின்றனர்.
சமுதாயத்துக்காகத் தன்னை அர்ப்பணித்து உழைத்துக் கொண்டிருக்கும் செளம்யா, இந்நிகழ்வுக்கு அன்போடு அனைவரையும் அழைக்கிறார்.


