சிதம்பரம் கோயிலில் எதிர்ப்பை மீறி தமிழில் ஓங்கிப்பாடிய ஆறுமுகசாமி மறைந்தார்


சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழ் ஓங்கி ஒலிக்கப் போராடிய சிவனடியார் ஆறுமுகசாமி மறைவு

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் தேவாரம் பாடக் கூடாது என்று தீட்சிதர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அதனை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவர் சிவனடியார் ஆறுமுகசாமி.

தீட்சிதர்களின் கடும் எதிர்ப்பையும் அனாயசமாக எதிர் கொண்ட இவரின் நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே தமிழகத்தில் உள்ள நடராஜர் கோயிலில் தமிழ் ஒலித்தது. இதுதொடர்பாக நேருக்கு நேராக தீட்சிதர்களுடன் போராடிய சிவனடியார் ஆறுமுகசாமிக்கு, 2008-ம் ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பும் பலம் சேர்த்தது. தீர்ப்பின்படி சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆறுமுகசாமி தேவாரத்தை வெற்றியின் களிப்போடு ஓங்கிப் பாடினார்.

அதே போன்று தீட்சிதர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் நடராஜர் கோயிலை தமிழக அரசின் அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர் ஆறுமுகசாமி. சமநீதி, சமூகநீதி, மொழிக்காக ஆன்மிக தளத்தில் நின்ற போராடிய உயிர் பிரிந்து தமிழர்களை ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.

சிதம்பரம் நடராசர் ஆலயத்தில் தமிழ் தேவாரப் பாடல்களை பாட வேண்டும் என தன் முதுமையிலும் தில்லை தீட்சிதர்களை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்திய ஐயா ஆறுமுகசாமி அவர்கள் தனது 95 வயதில் மரணமடைந்திருக்கிறார். சமஸ்கிருத மந்திரங்களை கோயிலில் பாடக் கூடாது என கூறியதற்காக பிராமண தீட்சிதர்கள் அவரை தடியால் அடித்தார்கள். கோயிலில் இருந்து தூக்கி எறிந்தார்கள். ஆனால், அய்யா ஆறுமுகசாமி அவர்கள் தமிழ்நாட்டில் ஆலயங்களில் தமிழ் பாடல்கள் தான் பாட வேண்டும் என நீதிமன்றத்தை நாடினார். ஒருமுறை அவருக்கு கோயிலில் ஓரத்தில் நின்று பாடச் சொல்லி அனுமதி கிட்டியது. அதையும் கூட பாட விடாமல் அவரை தீட்சிதர்கள் அவமதித்தனர். ஆனாலும், அசராமல் பாடினார் ஆறுமுகசாமி அவர்கள். தீட்சிதர்கள் கையில் இருக்கும் கோயில் நிர்வாகத்தை அறநிலையத் துறைக்கு மாற்ற வேண்டும் என தன் வாழ்நாளெல்லாம் போராடியவர். தீட்சித பிராமணர்களின் சிம்ம சொப்பனமான அய்யாவின் மறைவுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் அஞ்சலி செய்ய கடமைப்பட்டுள்ளது.

Leave a Response