இதுதான் தமிழ்ப்பாணியா மணிரத்னம்? காற்றுவெளியிடை – விமர்சனம்

நாயகன் கார்த்தி, நாயகி அதிதிராவ் ஹைதரி ஆகியோரை வைத்துக்கொண்டு ஒரு அழகான காதல் கதையைச் சொல்ல முயன்றிருக்கிறார் மணிரத்னம்.

கார்த்தியின் தோற்றத்தில் மாற்றம் செய்தால் வேடத்துக்குப் பொருந்துவார் என்று நினைத்திருக்கிறார்கள். அப்படி அமையாமல் சோதனையாகிவிட்டது.

நாயகி அதிதி நல்லவரவு. நன்றாக இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார்.

காதலர்களுக்குள் நடக்கும் ஊடல், கூடல் ஆகியனதாம் கதைக்களம் எனும்போது, கார்கில் போர், பாகிஸ்தான் சிறை ஆகிய எதுவுமே கைகொடுக்கவில்லை.

கல்யாணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக்கொள்வதை வலிந்து திணித்திருக்கிறார் மணிரத்னம். கார்த்தியின் கல்யாணம் நடக்காமலே அவருக்குக் குழந்தை பிறக்கிறது. கார்த்திக்கு ஒரு அண்ணன். அவரும் வளைகாப்பு நடத்த வேண்டிய நேரத்தில் கல்யாணம் செய்து கொள்வதாகக் காட்சி. அப்போது வரும் பாடலில் இது தமிழ்ப்பாணி என்றொரு வரி வேறு காதில் விழுந்து தொலைக்கிறது.

நாயகனின் குடுமபம், தமிழகத்தின் பிள்ளை சாதியைச் சேர்ந்த குடும்பம் என்பதற்கும் எந்த அடையாளமும் இல்லை.பாரதியின் பாடலும் மீன்குழம்பும் ஊட்டி வளர்த்த ஒரு தமிழ்த்தாயிடம் வளர்ந்த பிள்ளை என்று சொல்லிக்கொள்ள கார்த்தியிடம் ஒரு நல்ல அம்சம் கூட இல்லாமல் போனது சோகம்.

ஏ.ஆர்.ரகுமான் படத்துக்குப் பெரிதாக உதவவில்லை.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உழைப்பில் காட்சிகள் அழகு. அதேசமய்ம் எல்லாக்காட்சிகளுமே மணிரத்னத்தின் முந்தைய படங்களில் பார்த்த காட்சிகளாகவே இருப்பதால் சலிப்பு.

வசனங்கள் அரதப்பழசாக இருக்கின்றன. காதலியிடம் சண்டை வரும்போது, முறத்தை எடுத்துக்கொண்டு வரவேண்டாமா? என்று கேட்கிறார். மணிரத்னத்துக்குப் புறநானூறு தெரிகிறதாம்.

ஆனால், உன்னிடம் நாய்க்குட்டி போல நடந்துகொள்ள முடியாது என்று படத்தில் சொல்லும் நாயகி, காதலின் பேரால் படம் முழுதும் அப்படித்தான் நடந்துகொள்கிறார். இதுதான் பெண்ணியமோ?

மணிரத்னம், இனிமேல் திரைப்படம் எப்படி எடுப்பது என்று வகுப்பெடுக்கலாம். திரைப்படம் எடுக்கக்கூடாது.

Leave a Response